ராஞ்சி: ஜார்கண்டில், ஆட்சியை தக்க வைக்க முதல்வர் ஹேமந்த் சோரன், ஆளுங்கட்சி கூட்டணி  எம்எல்ஏக்களை கூண்டோடு ரகசிய இடத்திற்கு மாற்றி உள்ளார். ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சுரங்க குத்தகை ஒதுக்கீடு பெற்றதாக பாஜ குற்றம்சாட்டியது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அவரது எம்எல்ஏ பதவியை பறிக்கும்படி, ஜார்கண்ட் ஆளுநருக்கு இரு தினங்களுக்கு முன் தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. அதன்படி, ஹேமந்த் சோரனை ஆளுநர் ரமேஷ் பயாஸ் அதிகாரப்பூர்வமாக நேற்று தகுதி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக கூட்டணி எம்எல்ஏ.க்களுடன் ஹேமந்த் சோரன் அடுத்தடுத்து தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், அனைத்து எம்எல்ஏக்களும் 3 பேருந்துகளில் ஏற்றப்பட்டு, ரகசிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டால், முதல்வர் பதவியை இழப்பார். இந்த அரசியல் நெருக்கடியை பயன்படுத்தி, ஆளுங்கட்சி எம்எல்ஏ.க்களை வளைக்க பாஜ முயற்சிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஜேஎம்எம், காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகளின் 43 எம்எல்ஏக்கள், தலைநகர் ராஞ்சியில் இருந்து 30 கிமீ தொலைவில் குந்தி பகுதியில் உள்ள ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இங்கிருந்து அண்டை மாநிலமான சட்டீஸ்கர் அல்லது மேற்கு வங்கத்துக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படலாம் என கூறப்படுகிறது. ஜார்கண்டில் பரபரப்பான ரிசார்ட் அரசியல் ஆரம்பித்துள்ளதால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

* கடைசி சொட்டு ரத்தம்…
நிகழ்ச்சி ஒன்றிய பேசிய முதல்வர் ஹேமந்த் சோரன், ‘எங்களுடன் அரசியல் ரீதியாக போட்டியிட முடியாமல், அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை பயன்படுத்தி மாநில அரசை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.  நான் மக்களுக்காக உழைப்பதை யாராலும் தடுக்க முடியாது. நான் ஒரு பழங்குடியினரின் மகன். எங்கள் மரபணுவில் பயம் என்பதே கிடையாது. என் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவேன்,’ என்று கூறினார்.

கட்சிகளின் பலம்
மொத்த தொகுதி    81
ஜேஎம்எம்    30
காங்கிரஸ்    18
ஆர்ஜேடி    1
என்சிபி    1
சிபிஐ(எம்எல்)    1
பாஜ    26
ஏஜேஎஸ்யு    2
சுயேச்சை    2

* ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டாலும், கூட்டணி அரசுக்கு 51 எம்எல்ஏக்கள் இருப்பதால் ஆட்சி கவிழாது. பெரும்பான்மைக்கு 42 எம்எல்ஏ.க்கள் தேவை.

Source link