
ஆகஸ்ட் 14 முதல் 30வரை, காதம்பரி அரங்கம், தட்சிணசித்ரா அருங்காட்சியகம்
நம்முடைய தொன்மையான வரலாற்றையும் பாரம்பரியத்தையும் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்திருக்கும் இன்றைய சூழலில், சென்னையைச் சேர்ந்த பாலச்சந்தர், யூசூஃப் மதியா எனும் இரு ஓவியர்கள் தங்கள் ஓவியங்களின் மூலம் இன்றைய வரலாற்றைப் பதிவு செய்திருக்கின்றனர். பாலசந்தர், இயற்கை நிலக்காட்சிகளை சில நொடிகளில் அழகும் துல்லியமும் நிறைந்த பிரமிப்பூட்டும் ஓவியங்களாக வரைவதில் வித்தகர். தொழிலதிபராக இருக்கும் யூசூஃப் மதியா ஓர் அற்புதமான காட்டுயிர் ஓவியர்.
அந்த ஓவியங்களை அவர்கள் புத்தகமாக வெளிக்கொணர்ந்தபோது, அதற்கு பெரும் வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன. அந்தப் புத்தகத்தில், சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை அவர்கள் மிகவும் தத்ரூபமான வகையில் ஓவியங்களாக வரைந்துள்ளனர். அந்தப் புத்தகத்தின் நீட்சியாக, அவர்களின் உயிர்ப்பு மிக்க அந்த ஓவியங்களின் கண்காட்சி சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் தட்சிணசித்ரா அருங்காட்சியகத்தில் நடைபெற்றுவருகிறது. தட்சிணசித்ராவின் காதம்பரி அரங்கில் பாலச்சந்தர், யூசூஃப் மதியா ஆகியோரின் ஓவியக் கண்காட்சியைச் சென்னை வரலாற்று ஆய்வாளர் வி. ஸ்ரீராம் ஆகஸ்ட் 14 அன்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வு குறித்து வரலாற்று ஆய்வாளர் தியடோர் பாஸ்கரன் ஆகஸ்ட் 20 அன்று சிறப்புரையாற்றினார். இந்தக் கண்காட்சி மே மாதம் 30 வரை நடக்க இருக்கிறது.
இன்றைய தலைமுறையினருக்குக் குறிப்பாகக் குழந்தைகளுக்குச் சென்னையின் சிறப்பையும் மேன்மையையும் அறிமுகப்படுத்தும் விதமாக இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் ஓவியங்கள் இருக்கின்றன. சென்னையின் மீது பிடிப்பும் அதன் பாரம்பரியத்தின் மீது ஈர்ப்பும் கொண்டவர்கள் தவறவிடக்கூடாத கண்காட்சி.
ஓவியங்களின் வழியே சென்னையின் பாரம்பரியம்
ஆகஸ்ட் 14 முதல் 30வரை
இடம்: காதம்பரி அரங்கம், தட்சிணசித்ரா அருங்காட்சியகம்
கூடுதல் தகவல்களுக்கு: 9080721706