புதுடெல்லி: உலகம் முழுவதும் சிறுதானியங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. எனவே சிறு தானிய உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும்என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 92-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:

சில நாட்களுக்கு முன்பு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கே ‘ஸ்வராஜ் ‘(சுயராஜ்ஜியம்) என்றதொலைக்காட்சி தொடரை ஒளிபரப்பினர். இது, சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த, இதுவரை கேள்விப்படாத நாயகர்கள், நாயகிகளின் வரலாற்றை, தேசத்தின் இளைய தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் மிகச் சிறப்பான முயற்சி ஆகும்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், ஞாயிறுதோறும், இரவு 9 மணிக்கு இது ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த தொடர் 75 வாரங்கள் வரை ஒளிபரப்பப்படும். மக்கள் அனைவரும் இதை பார்க்க வேண்டும். இந்த தொடரை கண்டிப்பாக பார்க்க குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும் இந்த தொடரின் ஒளிப்பதிவை மாணவர்களுக்கு காண்பிக்கலாம். திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகள் திறக்கும்போது சிறப்பு நிகழ்ச்சியாக இதை காட்சிப்படுத்தலாம். இதன்மூலம் சுதந்திரத்தை பெற்றுத் தந்த மாமனிதர்கள் பற்றி நமது தேசத்தில் புதிய விழிப்புணர்வு ஏற்படும்.

சென்னையைச் சேர்ந்த தேவி வரதராஜன் என்ற பெண், எனக்கு அனுப்பிய கடிதத்தில், வரவிருக்கும் புத்தாண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதால், அதுபற்றி பேச வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பண்டைய காலம் முதல் நமது விவசாயம், கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றின் அங்கமாக சிறுதானியங்கள் இருந்து வருகின்றன. நமது வேதங்களிலே சிறுதானியங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இதேபோல புறநானூறு மற்றும்தொல்காப்பியத்திலும்கூட, சிறுதானியங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

நீங்கள் நாட்டின் எந்த பகுதிக்குச் சென்றாலும், அங்கே இருக்கும் மக்களின் உணவு முறைகளில், பல்வேறு வகையான சிறுதானிய வகைகள் இடம் பெற்றிருப்பதை காண முடியும். நமது கலாச்சாரத்தைப் போலவே, சிறுதானியங்களிலும் பலவகைகள் உள்ளன. ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க சிறுதானியங்கள் கணிசமாக உதவி புரிகின்றன. வரகு,சோளம், சாமை, ராகி, கம்பு, தினை,குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள், விவசாயிகளுக்கும் அதிக லாபகரமானது. இன்று உலகம் முழுவதும் சிறுதானியங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. எனவே சிறு தானிய உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும்.

நம் நாட்டுக்கு எந்த வெளிநாட்டு தலைவர்கள் வந்தாலும், அவர்களுக்கு இந்திய சிறுதானிய உணவுகளை அளிக்கமுயற்சிக்கிறேன். இந்த உணவு வகைகள் அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. நமது சிறுதானியங்கள் பற்றிய பல தகவல்களை திரட்டவும் அவர்கள் முயற்சி செய்கின்றனர்.

இது பண்டிகைகளுக்கான காலம். இந்த வேளையில் நமது பல தின்பண்டங்களிலும் சிறுதானிய வகைகளை பயன்படுத்துகிறோம். சிலர் சிறுதானிய குக்கீஸ்,சிறுதானிய பேன் கேக்குகள், சிறுதானியதோசை கூட தயாரிக்கின்றனர். உங்கள்வீடுகளில் தயாரிக்கப்படும் சிறுதானியதின்பண்டங்களின் படங்களை செல்ஃபிஎடுத்து சமூக ஊடகங்களில் பகிருங்கள். மக்கள் மத்தியில் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க இது உதவியாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.Source link