திருமலை: திருமலையில் நேற்று திருமலை நம்பியின் 1049-வது அவதார தின மஹோத்சவம் சிறப்பாக நடைப்பெற்றது.

ராமானுஜரின் தாய்மாமனான திருமலை நம்பிதான் முதலில் திருமலைக்கு வந்து, ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கர்யங்கள் செய்துள்ளார். இவரது வழி வந்த வாரிசுதாரர்கள், இன்றளவும் திருமலையில் சுவாமிக்கு தீர்த்த கைங்கர்யங்களை பல நூற்றாண்டுகளாக தினமும் அதிகாலை செய்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் வீற்றிருக்கும் திருக்கோயிலுக்கு சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள பாபவிநாசம் எனும் தீர்த்தத்தில் இருந்துதான் சுவாமிக்கு தீர்த்த கைங்கர்யங்களுக்காக தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம். திருமலை நம்பி தினமும் இவ்வளவு தூரம் நடக்கிறாரே என உணர்ந்த பெருமாள், பாபவிநாசத்துக்கு முன் ஆகாச கங்கை என்னும் மற்றொரு தீர்த்தத்தை உருவாக்கி கொடுத்துள்ளார். தற்போது இங்கிருந்துதான் சுவாமி கைங்கர்யத்துக்கும், அபிஷேக ஆராதனைகளுக்கும் புனித தீர்த்தம் திருமால் நம்பியின் வாரிசுதார்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

நேற்று திருமலை நம்பியின் 1049-வது அவதார தின மஹோத்சவத்தை முன்னிட்டு, தெற்கு மாட வீதியில் உள்ள அவரது சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஸ்ரீ ரங்கம் ஆண்டவர் ஆஸ்ரம பீடாதிபதி ஸ்ரீ மத் ஆண்டவர் வராகதேசிகர் சுவாமிகள், வாரிசுதாரர்களான டி.கே.கிருஷ்ணசுவாமி தாத்தாச்சாரியார், சக்ரவர்த்தி ரங்கநாதன், ஆழ்வார் திவ்ய பிரபஞ்சன திட்ட அதிகாரி புருஷோத்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.Source link