தன்னை சிறந்த நடிகைக்கான விருதுக்காக பரிந்துரைத்த பிலிம்பேர் இதழுக்கு எதிராக வழக்கு தொடருவேன் என தெரிவித்திருந்தார் இந்திய நடிகை கங்கனா ரனாவத். அதையடுத்து அவரது பெயரை பரிந்துரை பட்டியலில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது பிலிம்பேர்.

35 வயதான கங்கனா ரனாவத் திரைத்துறையில் கடந்த 2006 வாக்கில் எண்ட்ரியானவர். தமிழ் உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இவர் நடித்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை சொல்வது இவரது வழக்கமாக உள்ளது.

என்ன நடந்தது? மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்ட பயோபிக் படமான ‘தலைவி’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்து அசத்தியிருந்தார் கங்கனா. கடந்த 2021 வாக்கில் இந்த படம் வெளியாகி இருந்தது.

இந்த திரைப்படத்தில் அவரது அற்புதமான நடிப்பிற்காக எதிர்வரும் 67-வது பிலிம்பேர் விழாவில் சிறந்த நடிகைக்கான பட்டியலில் தேர்வாகி இருந்தார். இது தொடர்பான அறிவிப்பு அவருக்கு பிலிம்பேர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கனா தெரிவித்தது என்ன? “கடந்த 2014 முதல் நெறிமுறையற்ற, ஊழல் மற்றும் முற்றிலும் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வரும் பிலிம்பேர் போன்றவற்றை நான் தவிர்த்து வருகிறேன். இருந்தாலும் அவர்களது விருது விழாவில் பங்கேற்கும் படி எனக்கு தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் உள்ளது. இந்த முறை தலைவி படத்திற்கு விருது என சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்னை அவர்கள் இன்னும் பரிந்துரைத்து வருவதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இதில் நான் பங்கேற்பது எனது தொழில் தர்மத்திற்கு எதிரானது. அதனால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளேன். நன்றி” என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.

பிலிம்பேர் அறிக்கை: அவரது இந்த குற்றச்சாட்டை அறிந்து தற்போது சிறந்த நடிகைக்கான பரிந்துரையில் இருந்து கங்கனாவின் பெயரை நீக்கியுள்ளதாக பிலிம்பேர் தெரிவித்துள்ளது. கியாரா அத்வானி, கீர்த்தி சனோன், பிரனீதி சோப்ரா, டாப்ஸி மற்றும் வித்யா பாலன் போன்ற நடிகைகள் இந்த முறை சிறந்த நடிகைக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

“நீங்கள் சிறந்த நடிகைக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு உள்ளீர்கள். ஆகஸ்ட் 30 அன்று நடைபெற உள்ள இந்த விருது வழங்கும் விழாவில் நீங்கள் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். உங்களுக்கான இருக்கையை ஒதுக்கீடு செய்ய தங்களது வருகையை உறுதி செய்யவும் என தெரிவித்திருந்தோம். உங்களது வீட்டு விலாசத்தை அனுப்பினால் அழைப்பிதழ் அனுப்பி வைப்போம் எனவும் கங்கனாவுக்கு தெரிவித்திருந்தோம்.

அவர் இந்த விருது விழாவில் பர்ஃபாமென்ஸ் செய்ய வேண்டும் என தெரிவிக்கவில்லை. கங்கனா தெரிவித்துள்ளது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. இந்திய சினிமா ஆளுமைகளை ஒன்றாக இந்த விழாவில் இணைக்கும் முயற்சியாக அவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஐந்து முறை அவர் பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ளார். அதில் 2 முறை அவர் நேரில் வராத போதும் கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான பரிந்துரையில் அவரது பெயரை திரும்ப பெற்றுக் கொள்கிறோம். எங்களது நற்பெயரை கெடுக்கும் வகையிலான அவரது குற்றச்சாட்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க எங்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது” என பிலிம்பேர் ஆசிரியக் குழு தெரிவித்துள்ளது.

கங்கனா ரியாக்‌ஷன்: “ஊழல் நிறைந்த இந்த சிஸ்டத்திற்கு எதிரான எனது நிலைப்பாட்டில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. விருதுக்கான பரிந்துரையில் எனது பெயர் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இருந்தாலும் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஆஸ்கர், எம்மி போன்ற விருது விழாக்களையும் புறக்கணிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Source link