குப்பம்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது குப்பம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, பஸ் நிலையம் அருகே கட்சி சார்பில் ‘அண்ணா கேன்டீனை’ அவர் திறந்து வைத்தார்.

ஆனால், அவர் திறப்பு விழா நடத்துவதற்கு முதல் நாள் இரவே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலவை உறுப்பினர் பரத் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், அங்கிருந்த பேனரை கிழித்து, அண்ணா கேன்டீனின் வெளியில் வைத்திருந்த பொருட்களை சூறையாடினர். இதனால், சந்திரபாபு நாயுடு உட்பட அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், சாலை மறியலில் ஈடுபட்டு, இதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், போலீஸார் ஆளும் கட்சியினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் தெலுங்கு தேசம் கட்சியினர் மீது ஜாதி வன்கொடுமை பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவு, குப்பம் அண்ணா கேன்டீன் மூடப்பட்ட பிறகு, அடையாளம் தெரியாத மர்ம கும்பல் கேன்டீன் கதவுகள் உட்பட பொருட்கள் அனைத்தையும் உடைத்து எறிந்ததோடு மட்டுமின்றி, அங்கிருந்த கேன்டீன் பேனர்களை கிழித்து சூறையாடிவிட்டு தப்பியது. இதுகுறித்து நேற்று தெலுங்கு தேசம் கட்சியினர் குப்பம் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால் போலீஸார் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியினர் குப்பத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.Source link