துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக கோலியின் இன்னிங்ஸ் பார்க்க நன்றாக இருந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் கோலி 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நடப்பு ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நிலைத்து நின்று விளையாடி இருந்தார். இந்தப் போட்டியில் அவர் அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் அவர் அரை கிணறுதான் தாண்டியிருந்தார். 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸரை தனது இன்னிங்ஸில் அவர் விளாசி இருந்தார். மற்றொரு சிக்ஸர் அடிக்க முயன்று சுழற்பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார்.

இந்நிலையில், அவரது இன்னிங்ஸ் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார் வாசிம் ஜாபர். “அந்த 35 ரன்கள் ஆட்டத்தில் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் நாம் சேஸ் செய்தது 170 அல்லது 180 ரன்கள் அல்ல. வெறும் 148 ரன்கள்தான். இந்த மாதிரியான இலக்குகளை விரட்டும்போது பேட்டிங் செய்யும் அணியில் எந்தவித சரிவும் இல்லையெனில் வெற்றி நிச்சயம். அதனால் அந்த ரன்கள் முக்கியமானவை.

அவர் ஒரு பெரிய இடைவேளைக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளார். இப்போது களத்திற்கு திரும்பிய கையோடு ரன்களும் சேர்த்துள்ளார். விராட் கோலி போன்ற பெரிய வீரர் இது மாதிரியான சேஸ்களில் விளையாடும் போது எப்படியும் 60 – 70 ரன்களை சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவரது ரெக்கார்டும் அருமையாக உள்ளது. அதனால்தான் இந்த எதிர்பார்ப்பு அவர் மீது வைக்கப்படுகிறது” என ஜாபர் தெரிவித்துள்ளார்.Source link