விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்தின் நீளம் அயற்சியை ஏற்படுத்துவதாக கூறி பல எதிர்மறை விமர்சனங்கள் வெளியானதையொட்டி, படத்தின் 20 நிமிட காட்சிகள் நீக்கப்படுவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் புதன்கிழமை திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கோப்ரா’. ஸ்ரீநிதி ஷெட்டி, மிருளானி ரவி, மீனாட்சி, கே.எஸ்.ரவிக்குமார், இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லலித்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிக்கப்படியான திரைகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதில், குறிப்பாக படத்தின் நீளம் அயற்சியைத் தருவதாக பல எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகின.

இதையடுத்து, படத்தின் நீளத்தை குறைக்க படக்குழு முடிவு செய்தது. அதன்படி படத்தை சுவாரசியப்படுத்தும் நோக்கில் 20 நிமிடங்கள் வரை காட்சிகள் குறைக்கப்படுவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து 20 நிமிடங்கள் குறைத்துள்ளதாகவும், இன்று (செப்டம்பர் 1) மாலையிலிருந்து 20 நிமிடங்கள் குறைக்கப்பட்ட ‘கோப்ரா’ படம் திரையிடப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல் வெளியானதை அடுத்து பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். முன்னர் ‘கோப்ரா’ படத்தின் நீளம் 3 மணி நேரம் 3 நிமிடம் என்பது குறிப்பிடத்தக்கது.Source link