திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிப்பது குறித்து அம்மாநில உயர் நீதிமன்றம் அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறது.
கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை வேறு ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போது நரபலி குறித்த தனது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். இதுகுறித்து நீதிபதி ராமசந்திரன் கூறுகையில், "அரசின் கவனக்குறைவையும், மக்களின் விசித்திரமான நடவடிக்கைகளையும் நீதிமன்றம் கவனித்து வருகிறது. கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்படும் செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது என்பது மனித பகுத்தறிவை மீறிய செயல். இந்தச் செயல்களால் கேரளா எதை நோக்கிச் செல்கிறது என்ற ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது" என்று தெரிவித்தார்.