சென்னை : காங்கிரஸ் கட்சியில் இருந்து, மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் விலகியுள்ளதால், தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள அவரது ஆதரவாளர்கள் நிலைப்பாடு கேள்விக்குறியாகி உள்ளது.
குலாம்நபி ஆசாத் தனி கட்சி துவக்கினால், அவருடன் தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரும், அவரது ஆதரவாளர்களும் செல்ல தயாராக உள்ளனர் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.’காங்கிரஸ் எம்.பி., ராகுலின் பொறுப்பற்ற தலைமையால், காங்கிரஸ் தன் இருப்பிடத்தை பா.ஜ.,விடமும், மாநில கட்சிகளிடமும் இழந்து வருகிறது’ என, இரண்டு பக்கம் கடிதத்தில் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டுள்ள ஆசாத், காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று விலகினார்.
அவரது விலகல் காஷ்மீர், டில்லி உள்ளிட்ட வட மாநில காங்கிரசில் உள்ள சிறுபான்மை மக்களிடம், அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசில் இருந்து வெளியேறிய முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னாள் தலைவர்கள் சிலர், ஆசாத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர் தனிக்கட்சி துவக்க வேண்டும் என்றும், அவரது தலைமையில் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என்றும், தொலைபேசி வாயிலாக வலியுறுத்தி உள்ளனர்.

தமிழக காங்கிரசில், குலாம் நபி ஆசாத்திற்கு நெருக்கமாகவும், பினாமியாகவும் செயல்படும் தலைவர் ஒருவர், ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார். தமிழக காங்கிரசில் நீண்ட காலமாக மேலிட பொறுப்பாளராகவும், தேர்தல் பணிக் குழு தலைவராகவும் ஆசாத் பணிபுரிந்துள்ளார். அவரது பரிந்துரையில் தமிழக காங்கிரஸ் தலைவர், பொதுச்செயலர், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், மகளிர் காங்கிரஸ் தலைவர் போன்ற பதவிகளை பெற்றவர்களும் உண்டு. எனவே, ஆசாத் எடுக்கப் போகும் முடிவை தொடர்ந்து, தமிழக காங்கிரசில் உள்ள அவரது ஆதரவாளர்களின் நிலைப்பாடு தெரியவரும்,
இது குறித்து, தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:ஆசாதுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்காததற்கு, அவர் சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்தவர் என, கட்சி மேலிடம் காரணம் கூறுவது சரியல்ல. அப்பதவி இல்லையென்றாலும், அவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியாவது வழங்கியிருக்க வேண்டும்; அப்பதவியும் வழங்கவில்லை.
ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கும், அவரை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா பரிந்துரைக்கவில்லை. இதுபோன்ற காரணங்கள் தான், ஆசாத் விலகலுக்கு காரணமாக அமைந்து விட்டன.ஆசாத் பா.ஜ.,வில் இணைந்தால், அவரது ஆதரவாளர்கள் செல்ல வாய்ப்பு இல்லை; ஆனால், தனிக் கட்சி துவங்கினால், ஆதரிக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்