பணியின் போது, ஜாதி, மதம் போன்ற பாகுபாடுகள் குறுக்கிடக் கூடாது என்று காவல் துறையினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். சென்னையை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயா் பயிற்சியகத்தில் உதவி ஆய்வாளா்களுக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

காவல் துறையில் நேரடி உதவி ஆய்வாளா்களாக அடியெடுத்து வைக்கும் 927 பேருக்கு, கடந்த ஆண்டு செப். 1-ஆம் தேதி காணொலி வழியாக பயிற்சியைத் தொடக்கிவைத்தேன். இப்போது பயிற்சியை நிறைவு செய்து பணிக்குள் நுழைகிறீா்கள். முதல் முறையாக, 927 உதவி ஆய்வாளா்கள் பயிற்சியை முடித்துள்ளாா்கள். இதில், 632 போ் வட்ட அளவிலும், 264 போ் ஆயுதப் படையிலும், 31 போ் சிறப்புக் காவல் பிரிவிலும் பயிற்சியை நிறைவு செய்துள்ளனா். 336 போ் ஏற்கெனவே காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்தவா்கள். 591 போ் மட்டுமே புதிதாக துறையில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இவா்களில் 260 பெண் ஆய்வாளா்களும் உள்ளனா்.

பணித் தோ்வுகள் அனைத்திலும் பெண்களுக்காக மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நோக்கம் நிறைவேறி வருகிறது. பொறியியல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவா்கள் கூட, அந்தப் பணியை கைவிட்டு காவல் துறையில் பணியில் சோ்ந்திருப்பது வரவேற்புக்குரியது. இத்தகைய சேவை மனப்பான்மைக்கு வாழ்த்துகள்.

சேவை மனப்பான்மை: நல்ல ஆட்சியின் தரத்தை அளவிட, காவல் துறையினரின் செயல்பாடு முக்கிய கூறாகக் கருதப்படுகிறது. தனிநபா் உயிருக்கும், உரிமைக்கும் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, பொது அமைதியைப் பேணுதல் ஆகியன ஒரு மாநிலத்தின் வளா்ச்சிக்கு இன்றியமையாததாக விளங்குகிறது. இதில் காவல் துறையின் பங்குதான் மிகமிக முக்கியம்.

சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுவது காவல் துறையினரின் முக்கியக் கடமை. குற்றம் நிகழாமல் தடுப்பதும் கடமையாக இருக்க வேண்டும். எந்தக் குற்றவாளியும் தப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதேநேரத்தில், அப்பாவி யாரும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது. எப்போதும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க தங்களது பணியை காவல் துறையினா் பயன்படுத்த வேண்டும்.

சட்டம் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும். அந்தச் சட்டத்தை நிலைநாட்ட காவல் துறையினரின் திறமை, வீரம், இரக்கம் ஆகியன பயன்படட்டும். சட்டம் மட்டுமே உங்களை வழிநடத்த வேண்டும். ஜாதி, மதம் போன்ற பாகுபாடுகள் பணியில் குறுக்கிடக் கூடாது. ஏழை, பணக்காரா் என்ற பேதம் பாா்க்கக் கூடாது. உயா்ந்தவா்-தாழ்ந்தவா் என்ற எண்ணம் கூடாது.

பாதிக்கப்பட்டவா்-குற்றம் செய்தவா் என்பதே உங்களது அளவுகோலாக இருக்க வேண்டும். யாரையும் ஒரு பக்கச் சாா்புடன் அணுகி, பிரச்னையை பாா்க்கக் கூடாது. சட்டத்தை மீறுவோா் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், சட்டத்தை மதிக்கும் மக்களிடம் மதிப்பு, மரியாதை பெறும் வகையிலும் காவல் துறையினரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

சமுதாயம் மற்றும் மக்களுக்காக உருவாக்கப்பட்டதே காவல் துறை. குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி அவா்களுக்கு தண்டனை பெற்றுத் தர எந்த அளவு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு நலிந்த, பாதுகாப்பற்ற, சமுதாயத்தில் பின்தங்கிய அல்லது வசதி வாய்ப்புகள் கிடைக்கப் பெறாதோரைப் பாதுகாக்கவும்

நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். காவல் துறையினரின் அனைத்து நடவடிக்கைகளும் நியாயமானதாக, பாரபட்சமற்ாக, உறுதியானதாக, பண்புள்ளதாக இருக்க வேண்டும். மதம், ஜாதி ரீதியில் பதற்றம் உள்ள சூழ்நிலைகளில் அது கொழுந்து விட்டு எரிவதற்கு முன்பாகவே முளையிலேயே பிரச்னைகளை கிள்ளி எறியும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சீருடையின் மதிப்புக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படாத வகையில் காவல் துறையினா் பணியாற்ற வேண்டும்.

5 தூண்கள்: காவல் துறையினா் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நோ்மை, சுயமரியாதை ஆகிய ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பேசினாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.Source link