இந்தூர்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டுப் பெண்களைப் போன்றவர் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியது சர்ச்சையாகி உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர்  நிதிஷ்குமார் கடந்த வாரம் வெளியேறினார். பின்னர் நிதிஷ் குமார் தலைமையில்  புதிய அரசு அமைந்தது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், ‘நான் வெளிநாட்டிற்குச் சென்றேன். ​​அங்குள்ள பெண்கள் எந்த நேரத்திலும் தங்கள் காதலனை மாற்றிக்கொள்வார்கள் என்று ஒருவர் என்னிடம் கூறினார்.

பீகார் முதல்வருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. அவர் எப்போது யாருடைய கையை பிடிப்பார், பின்னர் யார் கையை விட்டு விலகுவார் என்று தெரியவில்லை’ என்றார். இவர் கூறிய கருத்து சர்ச்சையாகி உள்ள நிலையில், ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் அக்னிபாதை திட்டத்தில் சேரும் வீரர்கள் தங்களது பணிக்காலம் முடிந்ததும் பாஜக கட்சி அலுவலகங்களில் பாதுகாவலராக நியமிக்கலாம் என்று கூறினார். இவரது இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link