வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: வரும் அக்., 17 அன்று நடக்கும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் களமிறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, கருத்துக்கூற முடியாது எனக்கூறியுள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 28 ம் தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்., 17ல் அன்றும், அக்., 19ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தலைவர் பதவியை ராகுல் ஏற்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர் மறுத்து வருகிறார். இதனால், பிரியங்காவை தலைவராக்கும் முயற்சியும் நடந்தது. அதற்கும் ராகுல் தடை போட்டு விட்டார். இதனையடுத்து, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை புதிய தலைவராக்கும் முயற்சி நடந்து வருகிறது.

latest tamil news

இந்நிலையில், அதிருப்தி குழுவை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் மலையாள நாளிதழில் எழுதிய கட்டுரையில், தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும். செயற்குழுவில் காலியாக உள்ள பல இடங்களுக்கும் தேர்தலை அறிவித்திருக்க வேண்டும். முக்கிய பதவிகளில் இருந்து கட்சியை யார் வழிநடத்துவார்கள் என்பதை தீர்மானிக்க அகில இந்திய காங்கிரஸ் மற்றும் மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளை அனுமதித்திருந்தால் , புதிய நிர்வாகிகள் நியமனத்தை அங்கீகரிப்பதற்கும், புதிய தலைவரை கட்சியை வழிநடத்தவும் உதவியிருக்கும் எனக்கூறியுள்ளார். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்றால், புதிய நபரை தலைவராக்குங்கள்.இந்த தேர்தல், பல நன்மைகளையும் கொண்டுள்ளது.

உதாரணமாக, பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சியின் சமீபத்திய தலைமை போட்டியின் போது உலகளவில் ஆர்வம் ஏற்பட்டதை நாம் பார்த்தோம். கடந்த 2019 ல் தெரசா மேக்கு மாற்றாக நடந்த போட்டியில் ஏராளமானவர்கள் களமிறங்கினர். அதில் போரீஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். காங்கிரசில் இதேபோன்ற சூழ்நிலையை கொண்டால் கட்சி மீதான தேசிய ஆர்வத்தை அதிகரிக்கும். காங்கிரசை நோக்கி வாக்காளர்களை தூண்டும் தேர்தலில் போட்டியிட பலர் முன்வருவார்கள் என நினைக்கிறேன். கட்சி மற்றும் நாட்டிற்காக அவர்களின் தொலைநோக்கு பார்வையை முன்வைப்பது நிச்சயமாக மக்களின் ஆர்வத்தை தூண்டும் எனக்கூறியுள்ளார்.

இதனையடுத்து, அக்., 17 ல் நடக்கும் தலைவர் பதவிக்கான தேர்தலில் சசி தரூர் களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பல மூத்த தலைவர்களுடன் இது தொடர்பாக அவர், பேசி வருவதாகவும் தெரியவருகிறது.

latest tamil news

இதனையடுத்து நிருபர்களை சந்தித்த சசி தரூரிடம், தலைவர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், இது குறித்து தற்போது எந்த கருத்தும் கூற முடியாது. கட்டுரையில் என்ன எழுதினேனோ அதை ஒப்பு கொள்கிறேன். அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கான உட்கட்சி தேர்தல் மிகவும் நல்லது. தேர்தல் நடத்தப்படுவதை வரவேற்கிறேன். தலைவர் பதவியை ராகுல் ஏற்க மறுப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு குடும்பம் மட்டுமே, அதை வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கையில் மட்டும் கட்சி செயல்படக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link