கரோனாவால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், ஓடாத வாகனங்களுக்கான சாலை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.யுவராஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு சேர்த்து முக்கிய பணியை லாரிகள் செய்தன. ஆனால், முழு அளவில் வாகனங்கள் ஓடாத சூழல் இன்னும் இருக்கிறது.

இதனால், வருவாயின்றி, மாத தவணை செலுத்தவே லாரிஉரிமையாளர்கள் கஷ்டப்படுகிறார்கள். இந்நிலையில், வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிக்க அடுத்த ஆண்டு மார்ச் வரையில் கால அவகாசம் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. இதேபோல், 10-க்கும் மேற்பட்ட மாநில அரசுகள் வணிக வாகனங்களுக்கான சாலை வரியை ரத்து செய்துள்ளன.

எனவே, தமிழக அரசும் குறைந்தபட்சமாக ஓடாத வாகனங்களுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் முருகன் வெங்கடாசலம் கூறியதாவது:

கரோனா வைரஸ் பாதிப்புஇன்னும் முடியவில்லை. சரக்கு வாகனங்கள், மணல் லாரிகள், ஆட்டோக்கள் என அனைத்து வாகனங்களுமே செப்டம்பர் மாதம் வரையில் முடங்கித்தான் இருந்தன. பின்னர்தான் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு தற்போது இயங்கத் தொடங்கியுள்ளன. ஆனால், அனைத்து வாகனங்களுக்கும் லோடுகள் முழுமையாக கிடைப்பதில்லை. குறைந்த வருவாயுடன் இயங்கி வரும் வாகனங்களால் வாகன உரிமையாளர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரியை செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.

எனவே, ஓடாத வாகனங்களுக்கு சாலை வரியை ரத்து செய்யவும், சாலையில் ஓடிய வாகனங்களுக்கு சாலை வரி அபராதம் இன்றி செலுத்த கால அவகாசம் அளிக்கவும் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.Source link