துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 4வது  லீக் போட்டியில் ஏ பிரிவில் இந்தியா, ஹாங்காங் அணியுடன் மோதுகிறது. முதல் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 5விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உத்வேகத்தில் இந்தியா உள்ளது. பேட்டிங், பவுலிங் என இந்திய பலமாக உள்ளது. இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பன்ட் மற்று்ம் அஸ்வின்,பிஷ்னோய்க்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது. மறுபுறம் கத்துக்குட்டி ஹாங்காங், கொரோனா காலத்தில் 2020ம் ஆண்டு மார்ச் 6 முதல் 2022ம் ஆண்டு ஜூலை 11 வரை கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தது.

கடந்த மாதம் தான் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியது. ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக ஆடும் வாய்ப்பு கிடைத்ததே பெருமையான விஷயம். சர்வதேச டி.20 போட்டியில் இந்தியாவுடன் முதன்முறையாக ஹாங்காங் மோத உள்ளது. ஆனால் 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுடன் ஹாங்காங் 2 முறை மோதி உள்ளது. இதில் 2008ம் ஆண்டில் 256 ரன், 2018ம் ஆண்டில் 26 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. கடந்த 2018ம் ஆண்டு இந்தியா நிர்ணயித்த 286 ரன் இலக்கை விரட்டிய ஹாங்காங் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட் 174 ரன்எடுத்து மிரட்டினர். இருப்பினும் அந்த போட்டியில் 259 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி 26 ரன் வித்தியாசத்தில் தான் தோற்றது.

அந்த போட்டியில் 115 பந்துகளில் 92 ரன் விளாசிய நிஜாகத் கான் தலைமையில்தான் ஹாங்காங் இன்று களம் இறங்குகிறது. இதனால் அந்தஅணியை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அந்த அணியின் கேப்டன் நிஜாகத் கான் கூறுகையில், நான் கோஹ்லியின் மிகப்பெரிய ரசிகன். அவர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என விரும்புகிறோம். அவர் இந்திய அணிக்காக பழையபடி ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும். கடந்த முறை ஆசிய கோப்பை (2018) தொடரில் நாங்கள் 26 ரன் வித்தியாசத்தில் தான் இந்திய அணிக்கு எதிராக ஆட்டத்தை இழந்தோம். டி20 கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கடந்த காலங்களில் வலுவான அணிகள் அசோசியேட் அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவி உள்ளன. நேர்மறையான எண்ணத்துடன் இந்த போட்டியை நாங்கள் அணுக உள்ளோம்” என்றார்.

Source link