செய்திப்பிரிவு

-->

Last Updated : 27 Aug, 2022 08:30 PM

Published : 27 Aug 2022 08:30 PM
Last Updated : 27 Aug 2022 08:30 PM

”தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது” என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். “நீர்ச்சத்து குறைபாடு இருப்பதால் மருத்துவர்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தினர். அதன்படி சிகிச்சை பெற்று வருகிறார். அப்பாவின் உடல்நிலை இப்போது நன்றாக இருக்கிறது’ என்று அவரது மகன் மனோஜ் தெரிவித்திருந்தார். பின்னர், குடும்பத்தினர் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் உரிய பரிசோதனைகள், கண்காணிப்புடன் அவருக்கு சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாரதிராஜா சார்பில் வெளியிடபட்ட அறிக்கையில், ”என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.

மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!Source link