கொச்சி: ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவின் கடின உழைப்பின் சாட்சி என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கொச்சி கப்பல் தட்டும் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிதாக வடிவமைக்கப்பட்ட கடற்படை கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் பிரதமர் பேசியதாவது:

இன்று கேரள கடற்கரையோரம் ஒவ்வொரு இந்தியரும் ஒரு புதிய எதிர்காலம் உதயமாவதைக் கண்டு கொண்டிருக்கிறீர்கள். ஐஎன்எஸ் விக்ராந்த் மிகப் பெரியது. பிரம்மாண்டமானது. இன்று இந்தியா பெரிய போர்க்கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டமைக்கும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. நாட்டிற்கு ஒரு புதிய நம்பிக்கை விதிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்தின் ஒவ்வொரு அங்கமும் இந்தியாவில் உருவானது.

இந்திய வளங்கள், இந்திய தொழில்நுட்பம், இந்தியத் திறமையாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் அன்று சத்திரபதி சிவாஜி மஹாராஜ், ஒரு கப்பலைக் கட்டினார். இந்திய கப்பல்களின் சக்தியைக் கண்டு ஆங்கிலேயர்களே அஞ்சினர். இந்தியக் கப்பல்களின் வாணிபத்திற்கு பல்வேறு தடைகளை உருவாக்கினார்கள். முடிவில்லா சவால்களுக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் தான் பதில்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

புதிய கொடி: புதிய கடற்படை கொடியில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு பட்டைகள் நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக தேசியக் கொடி, அசோக சின்னம் மற்றும் நங்கூரம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. 1950-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடற்படை கொடியில் 4-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு: இந்திய கடற்படையில் ஏற்கெனவே ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் இருந்தது. இங்கிலாந்திடம் இருந்து வாங்கப்பட்ட இந்த கப்பல், இந்திய கடற்படையில் கடந்த 1961 முதல் 1997-ம் ஆண்டு வரை பணியாற்றியது. 1971-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் போரில் இந்த கப்பல் முக்கிய பங்காற்றியது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டபின், 2002 முதல் 2012-ம் ஆண்டு வரை அருங்காட்சியகமாக இருந்தது. அதன்பிறகு பயனற்ற நிலைக்கு சென்றதால், கடந்த 2014-15-ல் இந்தக் கப்பல் உடைக்கப்பட்டது.

இதையடுத்து இந்திய கடற்படையில் அதே பெயரில் புதிய விமானம் தாங்கி கப்பலை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உள்நாட்டிலேயே அத்தகைய கப்பல் தயாரிக்கப்பட்டது. இந்த புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல், கடந்த 2013-ம் ஆண்டு கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. கப்பலில் அனைத்து பணிகளும் முடிவடைந்ததால், சமீபத்தில் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரூ.20 ஆயிரம் கோடி செலவில், கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டு, கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பலில் பல நவீன தானியங்கி அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 100-க்கும் மேற்பட்ட இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்த கப்பலில் இடம் பெற்றுள்ளன.Source link