தாம் சுயமாகக் கற்றுத் தேர்ந்த சதுரங்க விளையாட்டை ஏழைக் குழந்தைகளுக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் இலவசமாக கற்றுத் தருகிறார் பொறியியல் பட்டதாரி ராகவன்.

திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜூ – விஜயலட்சுமி தம்பதியின் மகன் ராகவன். செஸ் விசுவநாதன் ஆனந்தின் சாதனையைப் பார்த்து தானும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பள்ளி பருவத்தில் சதுரங்கப் பயிற்சி பெற தொடங்கிய இவர், பொறியியல் பட்டம் பெற்று தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தவர். இவர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ‘யுனிகோ வேர்ல்டு ரெக்கார்ட் செஸ் பிளேயர்’ சான்றும் பெற்றுள்ளார்.

இலவச சதுரங்க பயிற்சி பற்றி ராகவன் தெரிவித்ததாவது: நான் பார்த்த வேலையை விட்டபோதுகூட அரசுப் பள்ளி மாணவர்கள் குறிப்பாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவசமாக சதுரங்கப் பயிற்சி அளிப்பதை நிறுத்தவில்லை. கரோனா தொற்று காலத்தில் ஆன்-லைன் மூலம் பயிற்சி கொடுத்தேன். இப்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பயிற்சி அளிக்கிறேன்.

மனமுள்ளவர்களின் நிதியுதவி கிடைத்தால் நான் தொடர்ந்து சதுரங்கப் போட்டியில் பங்கேற்பதுடன், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச சதுரங்கப் பயிற்சி அளிப்பது எனக்கு உற்சாகமாக இருக்கும் என்றார்.Source link