Connect with us

ஆன்மிகம்

எமதருமனுக்கு சந்நிதி; படிக்கட்டுகளாக நவக்கிரகங்கள்!  – திருப்பைஞ்ஞீலி திருத்தல அதிசயம் | yaman- tirupaineeli

திருப்பைஞ்ஞீலி தலத்துக்கு வந்தால் கல்யாண பாக்கியம் கைகூடும். நீண்ட ஆயுளுடன் வாழலாம். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும்! இங்கே எமனுக்கு சந்நிதி உள்ளது. நவக்கிரகங்கள் ஒன்பது படிக்கட்டுகளாக அமைந்திருக்கின்றன.

திருச்சியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். ஞீலி என்றால் கல்வாழை என்று அர்த்தம். இது ஒருவகை வாழை. ஞீலிவனமாக வாழைத் தோப்பாக இருந்த இந்தத் தலத்தில் சிவனார் வெளிப்பட்டதால், ஞீலிவனநாதர் என்று பெயர் அமைந்தது. கோயிலின் ஸ்தல விருட்சம் வாழைதான். அம்பாளின் திருநாமம் ஸ்ரீவிசாலாட்சி அம்பாள்.

திருமண பரிகாரத் திருத்தலம் இது. சப்த கன்னியரே கல்வாழையாக இருக்கின்றனர் என்பதாக ஐதீகம். கோயிலுக்கு கோபுரமில்லை. பாதியில் கட்டப்பட்ட நிலையிலேயே மொட்டை கோபுரமாகத் திகழ்கிறது. கடைவீதியையொட்டி இருக்கிற இந்த கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் நீண்ட விஸ்தாரமான பாதையில் நான்குகால் மண்டபம் அமைந்திருக்கிறது.

அடுத்து ராவணன் வாசல் என்று சொல்லப்படும் இரண்டாவது கோபுர வாசல் உள்ளது. இந்த இடத்தில் வெளிப்பிரகராம் அமைந்திருக்கிறது. இந்தப் பிராகாரத்தில் எந்தத் தலத்திலும் இல்லாத வகையில், அரிதினும் அரிதாக இருக்கிறது எமன் சந்நிதி.

கொஞ்சம் பள்ளமாகவும் குடைவரைக்கோயிலாகவும் அமைந்திருக்கிறது எமதருமனின் சந்நிதி. சோமாஸ்கந்தர் வடிவில் சிவனாரும் அம்பாளும் நடுவில் முருகப்பெருமானும் இருக்க, சுவாமியின் திருப்பாதத்துக்குக் கீழே, ஒரு குழந்தையின் வடிவில் எமதருமன் காட்சி தருகிறார்.

திருக்கடையூர், ஸ்ரீவாஞ்சியம் போலவே திருப்பைஞ்ஞீலி தலத்துக்கும் எமதரும ஸ்தலமாகப் போற்றப்படுகிறது இந்தத் தலம். திருக்கடையூர் க்ஷேத்திரத்தில், மார்க்கண்டேயனுக்காக எமதருமனை காலால் உதைத்து சம்ஹரித்தார் சிவபெருமான். பிரம்மா இருந்தால்தான் படைப்புத் தொழில். எமன் இருந்தால்தான் மரணம். எமனை சம்ஹரித்ததால் இறப்பு என்பதே உலகில் இல்லாமல் போனது.

இதனால் பூமியில் மனித பாரம் ஏறிக்கொண்டே போனது. பூமாதேவி சிவபெருமானிடம் சென்று முறையிட்டாள். தேவர்களும் முனிவர் பெருமக்களும் முறையிட்டார்கள். எமதருமனை உயிர்ப்பியுங்கள். எமனை மன்னித்து உலகை வாழவையுங்கள் என வேண்டினார்கள். அதன்படி, சிவபெருமான் எமனுக்கு உயிரூட்டினார். குழந்தையாக தன் பாதத்தில் இருத்தி அருளினார். தர்மத்தைக் காப்பாயாக என வரம் தந்தார்.

அப்படி எமனுக்கு அருளிய தலமாகப் போற்றப்படுகிறது திருப்பைஞ்ஞீலி. திருக்கடையூர் போலவே திருப்பைஞ்ஞீலியிலும் சஷ்டியப்த பூர்த்தி, ஆயுள் பரிகார ஹோமங்கள், சதாபிஷேகம் முதலான வைபவங்கள் நடத்தப்படுகின்றன. அப்படி நடத்துவது இங்கே விசேஷமாகப் போற்றப்படுகிறது.

அதுமட்டுமா? இன்னொரு சிறப்பும் இந்தக் கோயிலுக்கு உண்டு.

சனீஸ்வர பகவானுக்கு அதிபதி எமதருமராஜன். இங்கே, திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் எமதருமனுக்கு சந்நிதி இருப்பதால், சனீஸ்வரரை உள்ளடக்கிய நவக்கிரகத்துக்கு சந்நிதி இல்லை. மாறாக, ராவண கோபுர வாசலை அடுத்து சுவாமியை தரிசிக்கச் செல்லும் போது ஒன்பது படிக்கட்டுகள் இருக்கின்றன. இந்த ஒன்பது படிக்கட்டுகளும் நவக்கிரகங்களாகவே திகழ்கின்றன என்றும் இந்தப் படிகளைக் கடந்து சிவ சந்நிதிக்கு வந்து தரிசிப்பவர்களுக்கு கிரக தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பதும் உறுதி என்கிறார் கோயிலின் சங்கர குருக்கள்.

சிவனாரின் சந்நிதிக்கு எதிரில் நந்தி உள்ளது. நந்திக்கு அருகே ஒன்பது குழிகள் இருக்கின்றன. இந்த ஒன்பது குழிகள் தீபமேற்றி, நவக்கிரக வழிபாடாகச் செய்கிறார்கள் பக்தர்கள்.

திருப்பைஞ்ஞீலி தலத்துக்கு வந்தால் கல்யாண பாக்கியம் கைகூடும். நீண்ட ஆயுளுடன் வாழலாம். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும்!Source link

ஆன்மிகம்

அப்பர் பெருமானுக்கு அன்னமிட்ட சிவன்! 

திருப்பைஞ்ஞீலி தலம் கல்யாண வரம் தரும் தலம். அதேபோல், தனம் தானியம் பெருக்கித் தரும் தலம் என்றும் இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளும் தலம். இழந்ததையெல்லாம் மீட்டுக் கொடுக்கும் தலம்.

திருச்சியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஞீலிவனநாதர். ஸ்ரீநீலகண்டேஸ்வரர் எனும் திருநாமமும் உண்டு. அம்பாளின் திருநாமம் ஸ்ரீவிசாலாட்சி.

Source link

Continue Reading

ஆன்மிகம்

பட்ட கஷ்டமெல்லாம் போக்கும் திருமாந்துறை! | thirumandurai

திருமாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்ளுங்கள். குறிப்பாக, மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலம் இது. மூல நட்சத்திர நாளில், இங்கு வந்து தரிசனம் செய்வது மகத்தான பலன்களைத் தரும். இதுவரை பட்ட கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் ஆம்ரவனேஸ்வரர்.

மாமரங்கள் சூழ்ந்த வனத்தில் சிவபெருமான், முனிவருக்கு திருக்காட்சி தந்தருளிய தலம் என்பதால் இந்தத் தலத்துக்கு மாந்துறை என்று பெயர் அமைந்தது. சுவாமிக்கு ஆம்ரவனேஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. ஆம்ரவனேஸ்வரர் எனும் கோயிலின் ஸ்தல விருட்சம் மாமரம்.

திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமாந்துறை. தலத்தின் நாயகி ஸ்ரீபாலாம்பிகை. சக்தி வாய்ந்தவள் என்று அம்பாளைப் போற்றுகின்றனர்.

மிருகண்டு முனிவர் தவமிருந்து சிவனாரின் அருளைப் பெற்ற திருத்தலம். ஆதிசங்கரர் இந்தத் தலத்துக்கு வந்து சிவபெருமானையும் பாலாம்பிகையையும் தரிசித்து வழிபட்டுள்ளார் என்கிறது ஸ்தல புராணம்.

மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் ஈசனின் அடிமுடியைத் தேடிய கதை தெரியும்தானே. அப்போது, சிவபெருமானின் முடியைக் கண்டேன் என்று பொய் சொன்னார் பிரம்மா. இதனால் சாபத்துக்கு ஆளானார். இந்த சாபத்தைப் போக்கிக் கொள்ள பிரம்மா வழிபட்ட தலம் எனும் பெருமையும் ஆம்ரவனேஸ்வரர் கோயிலுக்கு உண்டு.

தட்சன் தான் நடத்திய யாகத்திற்கு சிவனாருக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், அந்த யாகத்திற்கு சூரியன் சென்றதால், சிவ சாபத்துக்கு ஆளானார். பிறகு சூரிய பகவான், சிவபெருமானை தவமிருந்து வழிபட்டு, சாப விமோசனம் பெற்றார். அப்படி சூரிய பகவான், சிவனாரை நோக்கி தவமிருந்ததும் சாப விமோசனம் பெற்றதுமான திருத்தலம் திருமாந்துறை என்கிறது ஸ்தல புராணம்.

அப்பர் பெருமானாலும் ஞானசம்பந்தர் பெருமானலும் பாடப் பட்ட புண்ணிய க்ஷேத்திரம் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள். திருமாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோயிலுக்கு வந்து சிவனாரையும் அம்பாளையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால் போதும்… வாழ்வில் சகல பாவங்களையும் போக்கியருளுவார்கள் அம்மையும் அப்பனும்!

திருமாந்துறை திருத்தலம் இந்திரன் வழிபட்டு அருள் பெற்ற தலமும் கூட. இங்கே உள்ள காவேரி தீர்த்தமும் காயத்ரி தீர்த்தமும் விசேஷமானவை என்று கொண்டாடப்படுகிறது. கிழக்கு நோக்கிய கோபுரத்துடன் திகழ்கிறது ஆலயம். கைத்தடியுடன் நிற்கும் சுந்தரர் அற்புதமாகக் காட்சி தருகிறார். நவக்கிரக சந்நிதியில், சூரிய பகவான் தன் இரண்டு மனைவியருடன் காட்சி தருவதும் காணக்கிடைக்காத ஒன்று. மேலும் சூரிய பகவான் தனியே நின்றபடியும் காட்சி தருகிறார். சூரியன் வழிபட்டு அருள்பெற்ற தலம் என்பதால்தானோ என்னவோ, நவக்கிரகத்தில் சூரியனாரைப் பார்த்தபடியே மற்ற கிரகங்கள் அமைந்திருக்கின்றன.

கிழக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிக்கிறார் ஆம்ரவனேஸ்வரர். சூரிய பகவான், இறைவனின் சந்நிதியில் வந்து வணங்கும் தலங்கள் பல உண்டு. பங்குனி மாதத்தின் முதல் மூன்று நாட்கள் சூரியக்கதிர்கள், சிவலிங்கத் திருமேனியைத் தழுவும் காட்சி சிலிர்க்கவைக்கும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்ளுங்கள். குறிப்பாக, மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலம் இது. மூல நட்சத்திர நாளில், இங்கு வந்து தரிசனம் செய்வது மகத்தான பலன்களைத் தரும். இதுவரை பட்ட கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் ஆம்ரவனேஸ்வரர்.Source link

Continue Reading

ஆன்மிகம்

ஜெய் அனுமனுக்கு செந்தூர பிரசாதம் ஏன்?; பிரிந்த தம்பதியை சேர்த்துவைக்கும் செந்தூரம்!  | hanuman – chendhuram

அனுமனின் பிரசாதமாக வழங்கப்படும் செந்தூரத்தை தினமும் இட்டுக்கொண்டால், கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும்; பிரிந்த தம்பதி விரைவில் ஒன்று சேருவார்கள்; சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள் என சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆஞ்சநேயர் வழிபாடு மிக மிக வலிமையானது. ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. அதேபோல், வைணவக் கோயில்களில் ஆஞ்சநேயருக்கு தனிச்சந்நிதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சிவபெருமானின் பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது. அம்மன் கோயில்களிலும் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயிலிலும் விபூதியும் குங்குமமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

பெருமாள் கோயில்களில் துளசியும் பிரம்மா குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் பிரம்மா பிரசாதமாக மஞ்சளும் வழங்கப்படுகிறது. அதேபோல் அனுமன் குடிகொண்டிருக்கும் ஆலயத்தில், அனுமனின் சந்நிதியில், துளசி பிரசாதம் வழங்குவது வழக்கம். முக்கியமாக, நாம் நெற்றியில் இட்டுக் கொள்வதற்கான பிரசாதமாக செந்தூரம் வழங்கப்படுகிறது.

எல்லா அனுமன் கோயில்களிலும் செந்தூரப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு காரணமும் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் இதுகுறித்து சொல்லப்பட்டுள்ளது.

சீதாபிராட்டியைக் கடத்திச் சென்ற ராவணன், அவளை அசோகவனத்தில் வைத்திருந்தான். சீதையைத் தேடி ராமர் ஒருபக்கம் அலைந்து கொண்டிருந்தார். அனுமன் சீதையைத் தேடிப் புறப்பட்டார்.

இலங்கைக்கு வந்த அனுமன், அங்கே அசோகவனத்தில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் சீதாபிராட்டியைக் கண்டார். பார்த்த க்ஷணத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். ‘நீங்கள் இல்லாமல் ஸ்ரீராமரின் முகமும் மனமும் வாடிப்போனார்’ என்று தெரிவித்தார். சீதையும் ராமரின் பிரிவால், இளைத்துப் போயிருந்தாள்.

அப்போது முன்னதாக, சீதாதேவியின் திருப்பாதத்தைக் கண்டு வணங்கினான். அவளின் பாத விரல்களில், மெட்டி அணிந்திருந்தாள் என விவரிக்கிறது வால்மீகி ராமாயணம்.

அந்தத் தருணத்தில் சீதையின் நெற்றியைக் கண்டான் அனுமன். சீதையின் நெற்றியில் குங்குமத்துக்கு பதிலாக செந்தூரம் இருந்தது. ‘அன்னையே… என்ன இது? உங்களின் நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்ளவில்லையே… ஏன்? எதற்காக செந்தூரத்தை இட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார் ஆஞ்சநேயர்.

அதற்கு சீதாதேவி, ‘முன்பைக் காட்டிலும் ராமபிரானின் நினைவு என்னை இன்னும் வியாபித்திருக்கிறது. மனதில் முழுமையாக இருக்கிறார் ராமபிரான். ராமச்சந்திர மூர்த்தியை மனதில் நினைத்துக்கொண்டு நெற்றியில் எப்போதும் குங்குமம் இட்டுக்கொள்வேன். ஆனால் குங்குமம் கூட கரைந்துவிடக் கூடியது. ஆனால் செந்தூரம் அப்படியில்லை. அவ்வளவு சீக்கிரத்தில் கரைந்துவிடாது. மேலும் செந்தூரம் இட்டுக்கொண்டால் வெகு நேரத்திற்கு அப்படியே இருக்கும். ஒருவேளை செந்தூரத்தைத் துடைத்தாலும் செந்தூரம் இருந்த இடத்தில் செந்தூரம் வைத்ததன் கறை இருக்கும். ‘என்னையும் என்னுடைய ராமச்சந்திர மூர்த்தியையும் எவராலும் பிரிக்க முடியாது. என்னுள் அவரின் நினைவுகளே இருக்கின்றன’ என்பதை வலியுறுத்தவே செந்தூரம் இட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்றார் சீதாதேவி.

இதைக் கேட்டதும் சிலிர்த்துப் போனார் ஆஞ்சநேயர். ‘என்னுடைய நினைவிலும் ராமபிரானே இருக்கிறார். அடியேனின் சகல செயல்களிலும் ராமச்சந்திர மூர்த்தியே இருக்கிறார்’ என்று சொல்லி, தன் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக்கொண்டார் அனுமன் என விவரிக்கிறது ராமாயணம்.

இதனால்தான் அனுமனின் பிரசாதமாக செந்தூரம் வழங்கப்படுகிறது. அனுமன் கோயில்களில், அனுமனை வணங்கி பிரார்த்தித்து விட்டு வருகிற பக்தர்களுக்கு செந்தூரப் பிரசாதம் வழங்குவது வழக்கத்துக்கு வந்தது.

மேலும் செந்தூரத்தை சீதாதேவி நெற்றியில் இட்டுக்கொண்டதால்தான், விரைவில் ஸ்ரீராமபிரானுடன் ஒன்று சேர்ந்தார் என்பதால், அனுமனின் பிரசாதமாக வழங்கப்படும் செந்தூரத்தை தினமும் இட்டுக்கொண்டால், கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும்; பிரிந்த தம்பதி விரைவில் ஒன்று சேருவார்கள்; சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள் என சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.Source link

Continue Reading

Trending