உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


எஸ்.மன்னர்மலை மணி, நெல்லையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:


அடுத்த லோக்சபா தேர்தலுக்கு, இரண்டு ஆண்டுகளே உள்ளன. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு காட்டும் காங்கிரஸ் கட்சி, கன்னியா குமரியில் இருந்து காஷ்மீர் வரை, ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற, ஐக்கிய இந்திய யாத்திரையை நடத்த உள்ளது. இதன் வாயிலாக, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் மக்களை சந்திக்க உள்ளார்.

latest tamil news

அதே நேரத்தில், உட்கட்சி பூசல் மற்றும் கோஷ்டி கானங்களால், சமீபத்திய ஆண்டுகளில், பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்த காங்கிரஸ், தங்கள் கட்சிக்குள் குறிப்பாக, தலைவர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கவே, யாத்திரை ஒன்றை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதற்கேற்ற வகையில், காங்கிரசில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும், ‘ஜி – ௨௩’ என்ற குழுவில் இடம் பெற்றுள்ள அதிருப்தி தலைவர்கள், படிப்படியாக கட்சிப் பொறுப்புகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். ஜி – ௨௩ தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், ஜம்மு – காஷ்மீர் தேர்தல் பிரசாரக் குழு தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

அவரைத் தொடர்ந்து, ஹிமாச்சல பிரதேச வழிகாட்டி குழுவின் தலைவரான ஆனந்த் சர்மா, அந்தப் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். அது மட்டுமின்றி, காங்., தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், சோனியா மற்றும் ராகுலை தவிர, அவர்களின் குடும்ப விசுவாசிகள் யாரேனும் நிறுத்தப்பட்டால், அவரை எதிர்த்து போட்டி வேட்பாளரை நிறுத்தவும், ஜி – 23 தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இவை எல்லாம், நுாற்றாண்டு கண்ட காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து வருவதையே காட்டுகின்றன.

காங்., மேலிட தலைவர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி மற்றும் பூசல் காரணமாகவே, இந்த ஆண்டு பஞ்சாபில், காங்கிரஸ் ஆட்சி பறிபோனது; மஹாராஷ்டிராவிலும், காங்., கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விட்டது. இந்தச் சூழ்நிலையில், அடுத்த மாதம் ௭ம் தேதி, கன்னியாகுமரியிலிருந்து துவங்கும் பாரத் ஜோடோ யாத்திரையால், பெரிய அளவில் பலனிருக்காது என்றே நம்பப்படுகிறது.

latest tamil news

எட்டு ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்து வரும் பா.ஜ., அசுர பலத்துடன், ௨௦௨௪ பொதுத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அதற்கு சமமான பலத்துடன், காங்கிரஸ் பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டும் எனில், காங்கிரஸ் தலைமை பதவிக்கு யார் வருவது என்பது உடனடியாக தீர்மானிக்கப்பட வேண்டும்.

அத்துடன், மாநிலங்கள் அளவிலும், கட்சியில் ஒவ்வொரு அமைப்பு ரீதியாகவும் உள்ள பிரச்னைகள் களையப்பட வேண்டும்; அதிருப்தி தலைவர்கள் இணக்கமாக செயல்படும் சூழ்நிலை உருவாக வேண்டும். இல்லையெனில், எத்தனை யாத்திரைகள் நடத்தினாலும், தண்டால் எடுத்தாலும், காங்கிரசால் ஆட்சியை பிடிக்க முடியாது; ராகுலின் பிரதமர் கனவும் பகல் கனவாகவே போய் விடும்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link