உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் 2016-ம்ஆண்டு ஜன. 2-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதேபோன்ற ஒரு தாக்குதலை மீண்டும் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத் துறை கடந்த 28-ம் தேதி எச்சரிக்கை விடுத்தது.
மேலும், தீவிரவாதிகளின் சதித் திட்டம் குறித்து மத்திய பாதுகாப்பு துறைக்கு உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். டிச.31 (இன்று) பிற்பகலில் இருந்தே தமிழகம் முழுவதும் வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட வேண்டும். ஜன.1-ம் தேதி இரவு வரை இந்த சோதனை தொடர வேண்டும்.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் அனைத்து அரங்கங்கள் மற்றும் புத்தாண்டையொட்டி மக்கள் அதிகம் செல்லும் கோயில்கள், தேவாலயங்களிலும் சோதனை நடத்த வேண்டும். மாநில எல்லைகளில் சோதனையிடும் போலீஸார், முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.