இயக்குநர் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி என்றாலே பக்காவான ‘க்ரைம் த்ரில்ல’ருக்கு உத்தரவாதம் உண்டு. ஏற்கெனவே ‘குற்றம் 23’, ‘பார்டர்’ படங்களுக்காக இணைந்த இக்கூட்டணி, தற்போது, சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ தொடரில் கைகோர்த்துள்ளது.

மூத்த திரைப்பட இயக்குநரின் மகன், ‘அதிரடி ஸ்டார்’ ஆதித்யா நடித்திருக்கும் ‘கருடா’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. ‘ரிலீஸுக்கு ஒருநாள் முன்பே இணையத்தில் அதை வெளியிட்டுக் காட்டுவோம்’ என்று சவால் விடுகிறது, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். தயாரிப்பாளர், காவல் துறைஉயரதிகாரியை நாடுகிறார். அவரோ, இந்த அசைன்மென்ட்டை அதிகாரி அருண் விஜய்யிடம் கொடுக்கிறார். தமிழ் ராக்கர்ஸின் தடத்தை அவர் கண்டுபிடித்தாரா, இல்லையா என்பது கதை.

திருட்டு விசிடி காலம் தொடங்கி, இன்றைய ‘டொரன்ட்’, ‘டார்க் வெப்’ வரை திரைப்படங்களைத் திருட்டு வீடியோவாக வெளியிட்டு வருமானம் பார்க்கும் கும்பலை, திரையுலகம் உட்பட எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதை, தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன். இரண்டரை மணி நேரத்தில் முடிந்துவிடுகிற ஒரு கதைக்கான களமாக இருந்தாலும், 8 எபிசோட்களில் விரியும் இத்தொடரில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத அளவுக்கு இயக்குநருக்கு உதவியிருக்கும் ஆர்.மன்னன் மன்னனின் உழைப்பு வியக்க வைக்கிறது.

மாஸ் கதாநாயகர்களை வழிபடும் ரசிகர்களின் மனப்பாங்கை விமர்சிப்பதில் தொடங்கி, ரூ.200 கோடியில் எடுத்த படத்தை ரூ.300 கோடிக்கு என பொய் சொல்லும் தயாரிப்பாளர், டிக்கெட் கட்டணம், கேன்டின், பார்க்கிங் கட்டணம் என திரையரங்க சம்ராஜ்யம், சாமானிய மக்களை அங்கு வரவிடாமல் துரத்தியடிப்பது வரை, தமிழ்சினிமாவுக்குள் புரையோடிப்போயிருக்கும் அத்தனை அழுக்குகளையும் கழுவி ஊற்றி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட தொடரைத் தயாரிக்க முன்வந்ததற்காகவே ஏவி.எம் நிறுவனத்தைப் பாராட்டலாம்.

வழக்கை புலனாய்வு செய்யும் அருண்விஜய்யின் கோபத்தின் பின்னால் இருக்கும் காரணத்தை அளவாக, அழகாக அமைத்திருக்கிறார் இயக்குநர். அதே நேரம், பைரசி வீடியோ மாபியா கும்பலின் முக்கிய தடமாக இருப்பவருக்கு அமைத்திருக்கும் ‘நியாய தர்க்கம்’ அதிர்ச்சி.

அருண் விஜய், மன அழுத்தத்துடன் வாழும் அதிரடி என்கவுன்டர் அதிகாரியாக ஆக்‌ஷன் காட்சிகளிலும் விசாரணைக் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். அவர் மனைவியாக வரும் ஐஸ்வர்யா மேனன் அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார். இவர்களைத் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார் தயாரிப்பாளர் அழகம்பெருமாள். ஒரு காட்சியில் வந்தாலும் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு அட்டகாசம்.

ஒரு க்ரைம் த்ரில்லர் தொடரை தன் ஒளிப்பதிவால் தூக்கி நிறுத்தியிருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர். ஒவ்வொரு எபிசோடையும் நறுக்கென்று கொடுத்திருக்கிறது சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு. விகாசின் தொடக்கப் பாடலும், பின்னணி இசையும் பெரும் பலம்.

பெரும் முதலீடு, ஒரு பெருங்குழுவின் கூட்டமைப்பில் உருவாகும் திரைப்படங்களை உடனுக்குடன் திருட்டுத் தனமாகவெளியிட்டு, நஷ்டத்தை ஏற்படுத்துபவர்களை கற்பனைக் கதை வழியே, திரை விலக்கிக் காட்ட முயன்றுள்ள இத்தொடர், தமிழ்த் திரையுலகச் சிக்கல்களையும் பொத்தி வைக்காமல் பந்தி வைத்துள்ளதால் பார்க்க வேண்டிய தொடராகிவிடுகிறது.Source link