குற்றாலத்துச் சாரல் சீசன் இப்போது! குற்றாலத்தின் இயற்கை அழகு எங்களை அரவணைத்து வரவேற்றது. குற்றாலத்திற்கு வந்துவிட்டுச் சாரலில் நனையாமல் போனால் அது நியாயமா! ஊரெங்கும் சாரல், தேகமெங்கும் இயற்கையின் தீண்டல்!

அருவியில் குளித்து வெளிவந்த பிறகு கடுமையான பசி! பசியின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அருவியில் ஒரு குளியலைப் போடுங்கள். பசி வயிற்றை மட்டுமல்ல, உடலையும் சேர்த்துக் கிள்ளும்! குற்றாலத்திலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள புகழ்பெற்ற தென்காசி கூரைக் கடை குறித்து அழகான ஓர் அறிமுகம் கொடுத்துக் கடை நோக்கி அழைத்துச் சென்றார் நண்பர்.

அசைவப் பிரியர்களுக்கு உகந்த இடம்

தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் இடதுபுறமாக அமைந்திருக்கிறது கூரைக்கடை. பக்கத்துத் தெருவில் வாகனத்தை நிறுத்திவிட்டு, கூரைக்கடையை நோக்கி விரைந்தோம். பெயருக்கு ஏற்றார் போல, கூரையால் வேயப்பட்ட எளிமையான உணவகம் அது! இருபக்கச் சுவர்களிலும் விதவிதமான உணவுகளின் அழகான புகைப்படங்களைக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அவற்றைப் பார்த்தாலே செரிமான சுரப்புகளின் வீரியம் நிச்சயம் அதிகரிக்கும். அசைவப் பிரியர்களுக்கான தகுந்த இடம் இந்தக் கூரைக்கடை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கடைக்குள் மரம்

நெருங்கிய விருந்தினர்களை உபசரிப்பதைப் போலச் சுற்றுலாப் பயணிகளை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தனர். கூரைக் கடைக்குள் ஒரு மரம் கிளை விரித்திருந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. சுமார் கால் மணிநேரத்தில் எங்களுக்கான இடம் கிடைத்தது. அமர்ந்த அடுத்த நிமிடமே, பசுமையான வாழை இலையை எங்கள் முன் பரப்பினார்.

ஒரு பிடி சாதம், ஒரு பிடி குழம்பு

பரிமாறப்பட்ட சுடு சாதம் இலையிலிருந்தும் ஆவியைப் பரக்கச் செய்தது. அடுத்து வரிசையாகக் குட்டி குட்டிக் கலன்களில் சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, நண்டுக் குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, ஈரல் கிரேவி, சுவரட்டி கிராவி, மீன் குழம்பு என வரிசையாக எங்கள் முன்பு அடுக்கப்பட்டன. ஒரு பிடி சாதம், ஒரு பிடி குழம்பு என அப்படியே அனைத்து வகையான வெரைட்டிகளையும் சுவைத்தோம்.

சார மீன் குழம்பு, நெத்திலிக் கருவாடு, வஞ்சரம் ஃபிரை, கெழுரு மீன் குழம்பு, அயிரை மீன் குழம்பு, மோழி மீன் குழம்பு, கனவா மீன், வாவல் மீன், கருவாட்டுக் குழம்பு, மூளை ஃபிரை, சுறா புட்டு, இறால் தொக்கு, தலைக்கறி, செட்டிநாடு சிக்கன், கோலா உருண்டை என அனைத்து ரக அசைவ உணவுகளும் அங்கே கிடைக்கிறது.

சைவமும் உண்டு

கிரேவி வகைகளைச் சாப்பிட்டு முடித்த பின்பு, ரச சாதம் சாப்பிட்டோம்.அப்படியொரு சுவை அந்த ரசத்திற்கு! ரசத்தைக் குடிப்பதற்காகவே கூரைக் கடையைத் தேடி வரலாம். சைவப் பிரியர்களுக்காகச் சாம்பார், கூட்டு, ரசமும் கூரைக்கடையில் கிடைக்கிறது.

சுவையான நினைவுகள்

கூரைக் கடையில் உணவின் விலையும் மிகப்பெரிய அளவில் இல்லை. கூரைக் கடையைத் தேடி பல்வேறு பிரபலங்கள் படையெடுத்த புகைப்படங்களை ஒரு இடத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் சோம்பும் ஓமமும் இறுதியாக எங்களுக்குக் கொடுக்கப்பட்டன. அழகான உணவு நினைவுகளுடன் கூரைக் கடையை விட்டு வெளியேறினோம்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

தொடர்புக்கு: drvikramkumar86@gmail.comSource link