எடப்பாடி கே. பழனிசாமி கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு அளித்ததைத் தொடா்ந்து, அவரது ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

ஜூன் 23, ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்திருந்த தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்திருந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணை நடைபெற்று வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய இரண்டு பொதுக்குழு கூட்டங்களும் செல்லும் என்று தீா்ப்பு வழங்கினா். இந்தத் தீா்ப்பைக் கேட்டதும், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு அருகில் திரண்டிருந்த அவரது ஆதரவாளா்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். பேருந்துகளில் சென்றவா்களுக்கும் இனிப்புகள் வழங்கினா். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்கள் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

 Source link