சென்னை: ஐஐடி மெட்ராஸ் 2022-23 பேட்ச் மாணவர்களுக்காக நடத்திய உள்ளகப் பயிற்சிக்கான ஆட்தேர்வு முகாமின் (Internship Drive) முதல் நாளிலேயே 32 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆட்தேர்வு முகாம் கடந்த 6ம் தேதி மற்றும் 13ம் தேதிகளில் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. நேரிலும் ஆன்லைனிலும் நேர்காணல் நடத்தி முதன்முறையாக ஹைப்ரிட் முறையில் இந்த ஆட்தேர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் கனடாவைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் பங்கேற்றுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உள்ளகப் பயிற்சிக்கான ஆட்தேர்வு முகாமின் முதல் அமர்வில், 7 நிறுவனங்களிடம் இருந்து 15 சர்வதேச உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்புகள் வரப்பெற்றுள்ளன. உள்ளகப் பயிற்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் 48 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதேபோல், உள்ளகப் பயிற்சிக்காக ஐஐடி மெட்ராஸ்-க்கு வருகைதந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 28 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இன்டர்ன்ஷிப் பயிற்சிகளின் முக்கியத்துவம் பற்றி பேசிய ஐஐடி மெட்ராஸ் ஆலோசகர் பேரா. முருகவேல், “தொழில்முறைப் பயிற்சி என்பது மாணவர்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த பகுதியாகும். தாங்கள் கற்றறிந்த திறன்களைப் பயன்படுத்தவும் மெருகேற்றிக் கொள்ள மாணவர்களுக்கு அங்குதான் வாய்ப்புக் கிடைக்கின்றன. நிறுவனங்கள் உள்ளகப் பயிற்சி மூலம் ஆட்களை தேர்வுசெய்யும் முறைக்கு மாறி வருவதால், மாணவர்கள் உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் மூலம் முன்வேலைவாய்ப்புகளை (pre-placement offers) பெறுவதும் முக்கியமாகிறது” எனக் குறிப்பிட்டார்.Source link