இந்தியாவில் சாவர்க்கர் அளவுக்கு விமர்சிக்கப்பட்ட, சுதந்திர போராட்ட தலைவர் யாரும் இருக்க முடியாது.எட்டாம் வகுப்பு, கன்னட பாடப் புத்தகத்தில், ‘சாவர்க்கர் அடைக்கப்பட்ட அந்தமான் சிறையில், ஒரு சிறிய சாவி துவாரம் கூட இல்லை. ஆனாலும், எங்கிருந்தோ வரும் புல்புல் பறவைகளின் இறக்கைகளில் அமர்ந்து பறந்து சென்று, தாய்நாட்டை காண்பார்’ என கூறப்பட்டுள்ளது.

கேலி, கிண்டல்


இதை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., வினர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.’சாவர்க்கர் அனுபவித்த கொடுமைகளை விவரிக்க, கவிதை நயத்துடன் எழுதப்பட்ட வரிகள் இவை’ என, கர்நாடக பா.ஜ., அரசு விளக்கம் அளித்துள்ளது. சாவர்க்கரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் கடுமையாக எதிர்க்க, பா.ஜ.,வும், ஹிந்து அமைப்புகளும், வீர சாவர்க்கர் என்று கொண்டாடுகின்றன.

கடந்த 1883 மே 28-ல்மஹாராஷ்டிராவில் பிறந்த சாவர்க்கர், 11 வயதிலேயே, சிறுவர்களை கொண்டு, ‘வானர சேனை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, சிவாஜி, விநாயகர் விழாக்களை நடத்தியவர். பாலகங்காதர திலகரை தன் அரசியல் குருவாக ஏற்ற சாவர்க்கர், சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அவரது சொற்பொழிவுகள், மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த, கல்லுாரியில் நீக்கப்பட்டார். ஆனாலும், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, ‘பாரிஸ்டர்’ படிக்க லண்டன் சென்றார்.

லண்டனில் தங்கியிருந்த இந்தியா ஹவுஸில், இந்திய மாணவர்களை ஒருங்கிணைத்து, சுதந்திர இந்திய சங்கத்தை உருவாக்கினார். இந்திய விழா, கொண்டாட்டம் என்ற பெயரில், மாணவர்களிடம் சுதந்திர தீயை மூட்டினார். கடந்த 1857-ல் நடந்த முதல் இந்திய சுதந்திர போராட்டத்தை, சிப்பாய் கலகம் எனக் கூறி, அதை அப்படியே மறைக்க முயற்சிக்கப்பட்டது. இதை விரிவாக ஆய்வு செய்து, ‘இந்திய சுதந்திர போராட்டம் – 1857’ என்ற நுாலை சாவர்க்கர் எழுதினார். இந்நுால் வெளிவரும் முன்பே தடை செய்யப்பட்டது. ஆனாலும், அவரது நண்பர்களால், நெதர்லாந்தில் அச்சடிக்கப்பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டது.

latest tamil news

இந்நுால், பகத்சிங்கால் வெளியிடப்பட்டது. இந்திய இளைஞர்களிடம் சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தியதில், இந்நுாலுக்கு பெரும் பங்குண்டு என்பதை யாரும் மறுக்கவில்லை.லண்டனில் தங்கியிருந்த இந்திய மாணவர்கள், ஆங்கிலேயே கலெக்டர்கள் சிலரை, லண்டனிலேயே சுட்டுக் கொன்றனர். இதற்கெல்லாம் சாவர்க்கர் தான் காரணம் என்பதை கண்டறிந்த ஆங்கிலேய அரசு, 1910-ல்அவரை கைது செய்து, இந்தியா அனுப்பியது.

வரும் வழியில், கப்பலின் கழிப்பறை ஜன்னலை உடைத்து, கடலில் குதித்து, பிரான்ஸ் நாட்டின் மார்செய்ல் துறைமுகத்தை அடைந்தார். ஆனாலும், அவரை ஆங்கிலேயர்கள் மீண்டும் பிடித்தனர். சட்ட விரோதமாக ஆயுதம் அனுப்பியது, மக்களை துாண்டும் வகையில் பேசியது என குற்றம்சாட்டி, 50 ஆண்டுகள் தண்டனை விதித்து, அந்தமான் சிறையில் அடைத்தது.அங்கு 12 ஆண்டுகள் பல கொடுமைகளை அனுபவித்த அவர், தன் அனுபவங்களை, புத்தகமாக எழுதினார்.

ஊக்கம்


கை, கால்களில் சங்கிலி மாட்டப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டார். துாக்கு மேடைக்கு எதிரே தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் தைரியத்தை இழக்காமல், சக சுதந்திர போராட்ட கைதிகளுக்கு ஊக்கம் தருபவராக இருந்திருக்கிறார். ஐம்பது ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டவர், 12 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டதை வைத்து, ‘மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததால் தான் அவர் விடுவிக்கப்பட்டார்’ எனக் கூறி, அவரை இன்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க.,வினர் கேலி செய்து வருகின்றனர்.

ஆனால், ‘சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதற்கான எந்த ஆவணமும் இல்லை’ என, 2020-ல் பார்லிமென்டில், மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்தது. மற்ற சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற தலைவர்களைப் போல சாவர்க்கர், வசதிகள் நிறைந்த சிறையில் அடைக்கப்படவில்லை.

மறுக்க முடியாது


மாறாக சங்கிலியால் கட்டப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டார். விடுதலைக்கு பின்னும் சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடவில்லை என்பதை, அவரது ஆதரவாளர்கள்சுட்டிக்காட்டுகின்றனர். காந்தியின் போராட்ட வழிமுறையை எதிர்த்தவர்,ஹிந்து ஒற்றுமையை வலியுறுத்தியவர், மதமாற்றத்தை எதிர்த்தவர் என்பதாலேயே, சாவர்க்கரின் தியாகத்தை மறைத்து, அவரை நாட்டின் எதிரியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் சித்தரிப்பதாக பா.ஜ., குற்றம்சாட்டி வருகிறது. மன்னிப்பு கேட்டார் என்று விமர்சிக்கப்பட்டாலும், சுதந்திர போராட்ட வரலாற்றில் சாவர்க்கரின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. அதனால் தான், இன்றளவும் அவர் பேசப்பட்டு வருகிறார்.

– நமது நிருபர் –


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link