2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில்தான் கரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து 2020ல் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த அவர் சொந்த ஊர் திரும்பிய நிலையில் அவருக்கு தொற்று உறுதியானது. அன்று தொடங்கி இன்று வரை கரோனாவை எதிர்கொள்வதில் இந்தியா எதிர்கொண்ட சவால்கள் ஏராளம். ஆனால், கரோனா தடுப்பூசிகளை துரிதமாகக் கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல் தற்போது 200 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி ஒரு பெருந்தொற்ற கையாள்வதற்கான முன்மாதிரி உதாரணமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி போடும்பணி தொடங்கியது. 17 ஜூலை 2022ல் 200 கோடியைத் தாண்டியது. தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய 18 மாதங்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா மீண்டும் சாதனை படைத்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடியைத் தாண்டியதற்காக இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாட்டின் தடுப்பூசி இயக்கம் ஒப்பிட முடியாத உயரத்தையும், வேகத்தையும் அடைந்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்தவர்களை எண்ணி பெருமை கொள்கிறேன். கரோனா தொற்றுக்கு எதிரான உலகளாவிய போரை இது வலிமைபெறச் செய்தது” என பதிவிட்டிருந்தார்.

ஆனால் இந்த இலக்கை அடைவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. தடுப்பூசி போட ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. இரண்டாவது அலையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் இந்த அச்சத்தை சற்று தளர்த்தி தடுப்பூசியின் அவசியத்தை உணர வைத்தது. அதன் பின்னர் தான் தடுப்பூசி திட்டம் மெள்ள மெள்ள சூடு பிடித்தது. இத்துடன் அரசாங்கமும் தொடர்ச்சியாக தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

நாட்டின் கடைக்கோடிக்குக் கூட தடுப்பூசி சென்று சேர வேண்டும் என்பதற்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர்கள் கால்நடையாக பல குக்கிராமங்களுக்கு கொண்டு சேர்த்தனர். ஆரம்பத்தில் கோவாக்சின், கோவிஷீல்டு என்று இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலை மாறி இப்போது பல வயதினருக்கும் ஏற்ப பல்வேறு தடுப்பூசிகள் உள்ளன.

தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள்:

> 12 – 17 வயது உடையவர்கள் தனியார் மருத்துவமனைகளில் “கோவோவேக்ஸ்’ தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

> 12 – 17 வயது உடையவர்கள், கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்த விரும்பினால், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.

> 15 – 17 வயது உடையவர்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்த வேண்டுமானால், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.

> 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.

> ஸ்புட்னிக்வி தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.

> 18 – 59 வயதுக்குட்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்படாது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் 18 – 59 வயதுக்குட்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

அமெரிக்க அதிபர் பாராட்டு: கரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஜனநாயக முறையில் இந்தியா வெற்றிகரமாக கையாண்டு உள்ளதாகவும், இதற்காக பிரதமர் மோடியை பாராட்டுவதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். கரோனா தொற்று நோயை கையாண்ட விதத்தில் இந்தியாவை ஒப்பிடுகையில் சீனா தோல்வி அடைந்து உள்ளதாகவும் பைடன் குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம், கரோனா கட்டுப்பாட்டில் இந்தியாவின் பங்களிப்பை பாராட்டிப் பேசியிருந்தார். கரோனா தொற்றின் எண்ணிக்கையைக் கணிசமாக குறைப்பதில் இந்தியா மிகப் பெரும் முன்னேற்றத்தை காட்டியுள்ளது. எளிய பொது சுகாதார நடவடிக்கைகளை நாம் பின்பற்றுவதன் மூலம் வைரஸை வெல்ல முடியும் என்பதை இந்தியா உலகிற்கு காட்டி உள்ளது. அத்துடன் சேர்ந்து கரோனா ஒழிப்பில் தடுப்பூசியும் பயன்படுத்தப்படுவதால் இந்தியா பெருந்தொற்று தடுப்பில் சிறப்பான முன்னோடியாக உள்ளது என்று பாராட்டியிருந்தார்.

இந்தப் பாராட்டு எல்லாம் இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு கிடைத்த வெற்றி. மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்க மாநில அரசுகள் அதற்கு ஏற்ப முகாம்களை ஒருங்கிணைத்து தடுப்பூசிகளை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்த்தன. கொள்கை ரீதியாக எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும் கூட ஒரு பெருந்தொற்றை சமாளிப்பதில் இந்தியா ஒன்றுபட்டு காட்டிய முனைப்பு தான் இன்று தேசத்தை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது.Source link