இந்தியாவின் போக்குவரத்துக் கட்டமைப்பு நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்ற வண்ணம் உள்ளது. நிலம், நீர், ஆகாயம் என மக்களுக்கான போக்குவரத்து மேம்பட்டுக் கொண்டே வருகிறது. அதன் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது மும்பை மாநகர சாலைகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் உலா வரவுள்ளது இந்த மின்சார டபுள்-டெக்கர் பேருந்து.

இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த வகை பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பேருந்தின் பயணத்தை தொடங்கி வைத்துள்ளார். Switch EiV 22 என அழைக்கப்படும் இந்தப் பேருந்தை பாம்பே மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து (BEST) கழகம் இயக்க உள்ளது.

இந்தப் பேருந்தை ஸ்விட்ச் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செய்துள்ளது. லேட்டஸ்ட் தொழில்நுட்பம், அல்ட்ரா மாடர்ன் டிசைன், உயர்தர பாதுகாப்பு அம்சங்கள், சிறந்த வசதி போன்றவை பெற்றுள்ளதாம். இந்தப் பேருந்து உள்நாட்டு பொதுப் போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் மட்டுமே இந்நிறுவனம் சுமார் 200 பேருந்துகளை வடிவமைத்து கொடுப்பதற்கான ஆர்டர்களை பெற்றுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • இந்த பேருந்தில் ஒரே நேரத்தில் சுமார் 65 பயணிகள் வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி.
  • அலுமினியம் பாடி.
  • அகலமான கதவுகளை பெற்றுள்ள செமி-லோ ஃபுளோரிங்.
  • பயணிகள் சிரமமின்றி ஏறி இறங்க ஒரு படிக்கட்டுக்கு பதிலாக இரண்டு படிக்கட்டுகள் இதில் இடம்பெற்றுள்ளதாம்.
  • 231-கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி.
  • டியூயல் கன் பேட்டரி சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
  • மாதாந்திர பயண பாஸ், பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் மூலம் பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பேருந்தின் அறிமுகம் நகரில் மாசுபாட்டை குறைக்கும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.



Source link