ஹைதராபாத்: “தெலங்கானாவில் நியாய விலைக் கடைகளில் ஏன் பிரதமர் மோடி படம் இல்லை” என்று கேள்வி எழுப்பிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெலங்கானா அமைச்சர் கேடிஆர் நையாண்டியுடன் எதிர்வினையாற்றியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம், பீர்கார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பேனரில் ஏன் பிரதமர் மோடி படம் இல்லை என மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பட்டீலிடம், நிர்மலா சீதாராமன் கேட்டார். மேலும், “மத்திய அரசு சார்பில் மக்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் ரேஷன் அரிசி ஒரு கிலோ சுமார் ரூ. 35 வரை விலை இருக்கும். இதனை மக்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வாங்கிக் கொள்கின்றனர். மாநில அரசு ரூ.3.30 ஒரு கிலோவுக்கு செலவு செய்கிறது. மீதமுள்ள ரூ.30.70 காசுகள் மத்திய அரசு செலவு செய்கிறது. போக்குவரத்து செலவை கூட மத்திய அரசே ஏற்கிறது.

ஆனால், தெலங்கானாவில் இந்த அரிசியை மாநில அரசே மக்களுக்கு வழங்குவதாக கூறிக் கொள்கிறது. கரோனா சமயத்தில், மத்திய அரசு அரிசியை இலவசமாக வழங்கியது. ஆனால், மாவட்ட ஆட்சியருக்கு ஒன்றுமே தெரியவில்லை. மாலைக்குள் ரேஷன் கடை முன்பு பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்க வேண்டும். இல்லையேல் நானே பேனர் வைப்பேன். ஐஏஎஸ் படித்து, மத்திய அரசுக்கு விஸ்வாசமாக, நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். புரிகிறதா?” எனக் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலளிக்கும் விதமாக, தெலங்கானா அமைச்சர் கேடிஆர் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி “நீங்கள் மோடி ஜி-யின் படத்தை தானே கேட்டீர்கள்… இதோ மோடி ஜி படம்” என்று பதிவிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி ஆட்சியில் சிலிண்டர் விலை நிலவரம் குறித்த தகவலும் இடம்பெற்றிருப்பது நையாண்டி பதிலடியாக பார்க்கப்படுகிறது.

மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் செயலை கடுமையாக விமர்சித்துள்ள அவர், “மத்திய அரசுக்கு தெலங்கானா செலுத்தும் அதிகமான வரிக்கு நன்றி தெரிவிக்கும் பேனரை பாஜக ஆளும் மாநிலங்களில் வைக்க வேண்டும்” என்றும் பதிலடி தந்துள்ளார்.Source link