உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
எம்.சுதாகர், குமரியில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்தது முதல், அடுத்த, 25 ஆண்டுகளில், உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், உலக நாடுகள் பல, தங்கள் பார்வையின் கோணங்களை மாற்றி, நம் நாட்டை இப்போது பெருமையுடன் பார்க்கத் துவங்கியுள்ளன.
அதே நேரத்தில், நம் நாடு எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற வேண்டும். அரசிடமிருந்து இலவசங்கள் எதையும் மக்கள் எதிர்பார்க்க கூடாது; ஒவ்வொருவரும் தங்களின் குடும்ப தேவைகளை, தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில், பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்பதையும் லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்

பிரதமர் மோடி. ஆனால், காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ, மக்கள் ஒரு போதும் தன்னிறைவு அடைந்து விடக்கூடாது. பொருளாதார சுதந்திரம் அடைந்து விடக்கூடாது. அவர்கள் எப்போதும் பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும். அப்போது தான் இலவசங்களை காட்டி, மூளைச்சலவை செய்து, அவர்களின் ஓட்டுகளை கவர்ந்து, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கோலோச்ச முடியும்; கொள்ளையடிக்க முடியும் என்று நினைக்கின்றன.
‘இலவசங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும்’ என, 75வது சுதந்திர தின விழாவில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி பேசியதற்கு, தமிழகம், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களின் முதல்வர்கள், தங்களின் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மக்கள் நலத் திட்டங்கள் வாயிலாக அளிக்கப்படும் இலவசங்களை, எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

அந்த மக்கள் நலத் திட்டங்கள் என்பது, உண்மையிலேயே மக்கள் நலத் திட்டங்களா அல்லது அரசியல்வா(வியா)திகள் நலத் திட்டங்களா என்பது தான் பிரச்னையே! மக்கள் தொடர்ந்து பிச்சைக்காரர்களாகவே இருந்தால் தான், கட்சிகளை நடத்தும் அரசியல்வா(வியா)திகள் தன்னிறைவோடும், பொருளாதார மேம்பாடுடனும், 100 தலைமுறைக்கு சொத்து சேர்த்து, காலம் தள்ள முடியும் என்று நினைக்கின்றனர்; அதனால் தான், மோடியின் பேச்சுக்கு எதிர்ப்புதெரிவிக்கின்றனர்.
அடடா… அடடா… எத்தகைய சுயநலமான, பேராசை பிடித்த அரசியல்வா(வியா)திகள் கூட்டத்திடம், இந்த நாடும், நாட்டு மக்களும் சிக்கி, சீரழிந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்தாலே, நெஞ்சம் பதறுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்