சென்னை: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கும் பிஎஸ்சி படிப்புகளில் சேர ஆகஸ்ட் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி படிப்புகள் ‘பிளண்டடு’ (Blended) எனப்படும் நேரடி மற்றும் இணையவழி கற்பித்தல் முறையில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் மெல்போர்ன் பல்கலை.யுடன் இணைந்து பிஎஸ்சி பட்டப்படிப்புகளை தொடங்குவதற்கு சென்னை பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த திட்டத்தில் பிஎஸ்சி வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகள் இடம்பெற உள்ளன.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த படிப்புகளில் சேரலாம். விருப்பமுள்ள மாணவர்கள் unom.ac.in என்ற இணையவழியில் ஆகஸ்ட் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர், பிளஸ் 2 பாடத்திட்டம் அடிப்படையில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதில் தகுதி பெறுபவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும். இந்த படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.49,000 கல்விக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 044-25399779 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் ரீட்டா ஜான் கூறும்போது, ‘‘மொத்தம் 3 ஆண்டுகள் கொண்ட இந்த படிப்பில் முதல் 4 பருவங்களில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடம்இடம்பெறும். இறுதியாண்டில் மாணவர்கள் தங்களுக்கான துறைகளை பிஎஸ்சி இயற்பியல், பிஎஸ்சி வேதியியல், பிஎஸ்சி கணிதம் என்று தேர்வு செய்து கொள்ளலாம். இந்தப் பாடப்பிரிவை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் நல்ல வரவேற்பு உள்ளது’’ என்றார்.