சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான அவசரச் சட்டம் நிறைவேற்றுவது மற்றும் போதைப் பொருட்களைத் தடுப்பது தொடர்பாக, சட்டத் துறை அமைச்சர், தலைமைச் செயலர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

‘ஆன்லைன் ரம்மி’ போன்ற இணையதளம் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்குப் பலரும் அடிமையாகி, தங்களது வாழ்வைத் தொலைத்து வருகின்றனர். குறிப்பாக, நடுத்தர, ஏழைக் குடும்பங்களை சேர்ந்த ஏராளமானோர் இதில் அதிக பணத்தை இழந்து, கடன் தொல்லை, மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகிவிட்டது. காவல் துறையைச் சேர்ந்தவர்களே தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நேரிட்டு உள்ளன.

எனவே, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அரசின் கவனத்துக்கும் இந்தப் பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்வது தொடர்பாக ஆலோசனை வழங்க, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழுவை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் 10-ம் தேதி அமைத்தார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மக்களுக்கு ஏற்படக்கூடிய நிதியிழப்பு, தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மை, ஆன்லைன் சூதாட்டங்களால் சமூக, பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகியவற்றை உரிய தரவுகளுடன் ஆராய்ந்து, இந்த விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்குப் பரிந்துரை செய்யுமாறு அந்தக் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட அக்குழு, கடந்த ஜூன் 27-ம் தேதி தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது.

இதையடுத்து, அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டது.

இதுதவிர, அவசரச் சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு கடந்த ஜூலை 30-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.

போதைப் பொருள் ஒழிப்பு

இதற்கிடையில், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியது. இதற்காக ‘போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைத் தடுப்பதில் கடமை தவறும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும், போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு என்ற தனிப் பிரிவையும் அமைத்து முதல்வர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான அவசரச் சட்டம் கொண்டுவருவது குறித்த ஆலோசனைக் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, மாநகர காவல் ஆணையர்கள் சங்கர் ஜிவால் (சென்னை), சந்தீப் ராய் ரத்தோர் (ஆவடி), அமல்ராஜ் (தாம்பரம்), போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சட்டத் துறைச் செயலர்கள் பி.கார்த்திகேயன், சி.கோபி ரவிகுமார் மற்றும் உதயசந்திரன் உள்ளிட்ட முதல்வரின் செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை உள்துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி முதல்வர் ஸ்டாலினிடம் விளக்கினார்.

பின்னர், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்வது தொடர்பான அவசரச் சட்டத்தைப் பிறப்பிப்பது, அதில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சட்டத் திருத்தம்

மேலும், தமிழகத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள், போதைப் பொருள் விற்பனை மற்றும் பதுக்கல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றை முழுமையாகத் தடுப்பதற்கு ஏதுவாக சட்டத்தில் கொண்டுவரப்பட வேண்டிய திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.Source link