திருப்பதி: பஞ்சபூல திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயில், ராகு – கேது சர்ப தோஷ நிவாரண திருத்தலமாகவும் விளங்கி வருகிறது. சுவர்ணமுகி நதிக்கரையில் ஞான பூங்கோதை தாயார் சமேதமாய் காளத்திநாதரை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

இக்கோயிலில் அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் தாரக நிவாசுலு தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் இது குறித்து சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட காளஹஸ்தி எம்.எல்.ஏ மதுசூதன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பக்தர்கள் உண்டியல் மூலம் தங்க நகைகளையும், வெள்ளி பொருட்களையும் காணிக்கையாக வழங்கி வருகின்றனர். இதுவரை வெள்ளி பொருட்களை மட்டுமே உருக்கி ராகு – கேது சர்ப தோஷ நிவாரண பூஜையில் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது.

இனி வரும் விஜய தசமி முதற்கொண்டு, தங்க நகைகளை உருக்கி, அதில் செய்யப்பட்ட ராகு மற்றும் கேது உருவங்களாலும் சர்ப தோஷ நிவாரண பூஜைகள் நடத்தப்படும். காளஹஸ்தி நகரில் உள்ள கோயில்கள் மராமத்துக்கு ஒவ்வொரு கோயிலுக்கும் ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. மேலும், ராகு-கேது நிவாரண பூஜை மண்டபமும் கட்டப்படும். கோயில் நிலங்களை பராமரிக்க கமிட்டிகள் அமைக்கப்படும்.மேலும் பாதுகாப்புக்கு ஓய்வு பெற்ற டிஎஸ்பி அல்லது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மேற்பார்வையில் குழு அமைக்கப்படும். இவ்வாறு எம்.எல்.ஏ மதுசூதன் ரெட்டி பேசினார்.Source link