துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரில் தனது 2வது ஆட்டத்தில் ஹாங்காங் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குரூப் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணி விதித்த 193 ரன்கள் இலக்கை துரத்திய ஹாங்காங் அணிக்கு நல்ல துவக்கம் அமையவில்லை. ஓப்பனிங் இறங்கிய அந்த அணி வீரர் யாசிம் முர்தாசாவை அர்ஷதீப் சிங் 2வது ஓவரிலேயே அவுட் ஆக்க, அடுத்த சில ஓவர்களில் கேப்டன் நிஜாகத் கான் ரன் அவுட் செய்யப்பட்டார். ஒன் டவுனில் இறங்கிய பாபர் ஹயாத் மற்றும் கிஞ்சித் ஷா இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். ஆனால் அவர்களின் உழைப்பு நீண்ட நேரம் கைகொடுக்கவில்லை.

41 ரன்கள் எடுத்த ஹயாத்தை ரவீந்திர ஜடேஜாவும், 30 ரன்கள் எடுத்திருந்த ஷாவை புவனேஷ்வர் குமாரும் வெளியேற்றினர். இதன்பின் ஜீஷன் அலி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினாலும், அதற்குள் 20 ஓவர்கள் முடிந்துவிட்டது. இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்த ஹாங்காங் அணி 152 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் இன்று 6 பவுலர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

ஆம், 6வது பவுலராக விராட் கோலி ஒரு ஓவர் பந்துவீசினார். 17வது ஓவராக வீசிய அவர் 6 ரன்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று ஹாங்காங் வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இன்னிங்ஸ்: இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல் இணை துவக்கம் கொடுத்தது. ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா அதே வேகத்தில் வெளியேறினார். அவருக்கு அடுத்தாக கோலியுடன் கூட்டணியமைத்த கே.எல்.ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பெரிய ஸ்கோரை எட்டவில்லை. ரோஹித் 21 ரன்களிலும், கே.எல்.ராகுல் 36 ரன்களிலும் அவுட்டான நிலையில், ஆட்டத்தை விராட் கோலியும், சூர்யகுமார் யாதவும் கைப்பற்றினர்.

இருவரும் இணைந்து ஹாங்காங்க் பவுலர்களின் பந்துவீச்சை நாலுபுறமும் விரட்டி அடித்தனர். அந்த வகையில் நீண்ட நாட்களாக ஃபார்முக்கு திரும்பாமல் விமர்சனங்களை எதிர்கொண்ட விராட் கோலி தற்போது மீண்டும் அரை சதத்தை அடித்து அதிரடி காட்டினார். அதேபோல சூர்ய குமார் யாதவும் அதிகவேகமாக அரைசதத்தை அடித்தவர், கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். இதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. இதில் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 68 ரன்களையும், விராட் கோலி 44 பந்துகளில் 59 ரன்களையும் எடுத்தனர்.Source link