மும்பை: காயம் காரணமாக நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. அவருக்கு மாற்று வீரரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

33 வயதான ஜடேஜா, இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று ஃபார்மெட்டிலும் விளையாடி வருகிறார். மொத்தம் 64 சர்வதேச டி20 போட்டிகளில் இவர் விளையாடி உள்ளார். பவுலிங், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் கைதேர்ந்த வீரர். நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவரது ஆட்டம் இந்தியா வெற்றி பெற கைகொடுத்தது. ஹாங்காங் அணிக்கு எதிராக அற்புதமான ரன் அவுட்டும் எடுத்திருந்தார்.

இந்நிலையில், அவருக்கு வலது காலின் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவரை அணியின் மருத்துவக் குழு கண்காணித்து வருகிறதாம். அவருக்கு மாற்றாக இந்திய அணியில் அக்சர் படேல் இடம் பெற்றுள்ளார். இவர் ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் மாற்று வீரராக இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அஸ்வின், சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான்.Source link