உலகின் மூத்த குடிகளாக வலம் வரும் தொல்குடி (பழங்குடி) மக்களின் மொழி, மரபுகள் போன்றவற்றை பாதுகாக்கவும் அவர்களுக்கான வாழ்வாதார உரிமைகளைப் பெற்று தரவும் ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9-ம் தேதி பன்னாட்டு உலக பழங்குடிகள் தினமாகக் கொண்டாடப்படும் என்று 1994-ம்ஆண்டில் அறிவித்தது.

அதன்படி இந்த ஆண்டு ‘மரபு அறிவைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் தொல்குடிப் பெண்களின் பங்கு’ என்ற கருத்தின் அடிப்படையில்உலக பழங்குடிகள் தினம் கடைப்பிடிக்கிறது.

இது குறித்து திண்டுக்கல் மாவட் டம் காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் ஒ.முத்தையா கூறியதாவது:

இந்தியாவில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட தொல்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, தரைப்பகுதிகளில் தோடர், கோத்தர், இருளர், கசவர், முள்ளுக் குரும்பர், பொட்டகுறும்பர், பணியர், காட்டு நாயக்கர், பளியர், குறவர், மலமலசர், காணிக்காரர், மலையாளி, காடர், முதுவர் என்று 36 வகையான தொல்குடிகள் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் நீலகிரி மலைப் பகுதிகளில் மட்டுமே 7 வகையான தொல்குடியினர் வாழ்கின்றனர். குறிப்பாக தோடர்களின் பழக்க வழக்கங்களும், கோத்தர்களின் தொழில்முறைகளும், இருளர்களின் பாம்பு பிடிப்பும் வியப்பில் ஆழ்த்துபவை. ஒவ்வொரு தொல்குடிகளும் தங்களுக்கான தனித்திறன்களை மரபான வாழ்க்கை, பாரம்பரிய அறிவு முறைகளை கைக்கொண்டுள்ளன.

தமிழகத்தில் பளியர்களின் தேனெடுப்பு, காடர்களின் யானைப் பேச்சு, வனம் சார்ந்த அறிவு, பருவ நிலைகள் குறித்த மரபு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்தியாவில் 1961-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 1,100 மொழிகள் இருந்துள்ளன. அது 2001-ம் ஆண்டு 850 ஆக குறைந்துவிட்டது. 50 ஆண்டுகளில் 250 மொழிகள் மறைந்து போயுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் 75 மொழிகள் அடையாளம் தெரியாமல் அழிந்து போயுள்ளன. இவையெல்லாம் தொல்குடி மக்களின் தாய்மொழிகள் தான். தமிழகத்தில் தோடர்கள் பேசும் தோடா மொழியும், கோத்தர்களின் கோத்தா மொழியும் இன்னும் பல இந்திய தொல்குடி மொழி களும் அழிவின் விளிம்பில் உள்ளன. தொல்குடி மக்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

அழியும் நிலையில் உள்ள மொழிகளைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு மைசூரு வில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் வாயிலாக ‘பாரத வாணி’ என்ற திட்டத்தை செயல்படுத்தி மொழிகளை ஆவணப்படுத்தி வருவது ஆறுதல் தருகிறது. மத்திய அரசு 1976-ம் ஆண்டு பட்டியல் இனத்தவர்களை மறுசீரமைப்பு செய்த போது பழநி மலைப் புலையர்களை பழங்குடிப் பட்டியலில் இருந்து பட்டியல் இனத்துக்கு மாற்றிவிட்டது. தங்களை மீண்டும் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று புலையர்கள் 46 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

குடியரசுத் தலைவராக பழங்குடியை சேர்ந்த திரவுபதி முர்மு பொறுப்பேற்றிருப்பது தொல்குடி மக்களிடையே பெரும் நம்பிக்கை ஒளியை பாய்ச்சியிருக்கிறது. நீண்ட கால துயரங்கள் களையப்படும் என்ற எதிர்பார்ப்பு தொல்குடியினரிடம் குறிப்பாக பெண்களிடம் ஏற்பட்டுள்ளதை களப்பணியின்போது காண முடிந்தது.

பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக சட்டங்கள், நலத்திட்டங்களை கொண்டுவர வேண்டும். அரசின் அக்கறையும் தொடர் செயல்பாடுகளுமே தொல்குடி மக்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.Source link