சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிர்வாகம், ஒரு இளம்பெண்ணுக்கு சிக்கலான மற்றும் அரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து புது வாழ்வு அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கணைய புற்றுநோயால் கண்டறியப்பட்ட 21 வயது பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத கட்டி கண்டறியபட்டது. பல வகையான கீமோதெரபி அளிக்கப்பட்ட பின்பும் கட்டி குறையவில்லை. பின்னர் கதிர்வீச்சு சிகிச்சைக்கு அப்பெண் உட்படுத்தப்பட்டார், என்றாலும் அதுவும் பலனளிக்கவில்லை.

இறுதியாக மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை துறையை அணுகினார் அப்பெண். அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு ஃப்ரான்ட்ஸ் கட்டி எனப்படும் கணையத்தின் அரிதான கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இத்தகைய கட்டிகள் ஒரு மில்லியனில் 0.1 சதவீதம் மட்டுமே உருவாகும் என்றும், இளம் பெண்கள் உடல்களிலேயே பொதுவாக ஏற்படும் என்பதும் தெரியவந்தது.

தொடர் பரிசோதனையில், கல்லீரல் மற்றும் குடலுக்கு இரத்தத்தை வழங்கும் அடிவயிற்றில் உள்ள பெரிய இரத்தக் குழாய்களுடன் கட்டி ஒட்டிக்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இளம்பெண் உடலில் இருந்த கட்டியை அகற்றவும், கல்லீரல் மற்றும் குடலுக்கு இரத்த ஓட்டத்தை பாதுகாக்கவும் மிகவும் நுணுக்கமான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சிக்கலான அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டது. சவாலானதாக இருந்தாலும், இந்த அறுவை சிகிச்சையே நோயாளிக்கு இருந்த ஒரே வாய்ப்பு.

அதன்படி, 12 மணி நேரம் நீடித்த முழு அறுவை சிகிச்சையானது புற்றுநோயியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ். சுப்பையா தலைமையிலான மருத்துவர் குழு வெற்றிகரமாக செய்தது. இத்தகைய அறுவை சிகிச்சைகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும். ஆனால் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) கீழ் இலவசமாக செய்யப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு அப்பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தீவிர கண்காணிப்புக்கு மத்தியில் படிப்படியாக குணமடைந்தார்.

அரிய புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையை திறம்பட செய்து இளம் பெண்ணுக்கு புதிய வாழ்வை அளித்த ராயப்பேட்டை அரசு மருத்துவர்கள் குழுவுக்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் குழுவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.Source link