சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து அதிமுக அரசால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. போக்குவரத்துக் கழகங்களின் கடன் மற்றும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி காலம் தாழ்த்திக் கொண்டிருந்தார்கள். தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி இறுதியாக ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதற்காக முதல்வர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பஞ்சப்படி 2015ம் ஆண்டிலிருந்து தரப்படவில்லை. எனவே தொழிலாளர் தோழர்களின் சிரமங்களை போக்குவதற்கு ஏதுவாக பஞ்சப்படி எனும் டிஏ-வை விரைவில் அளித்திடுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Source link