கோவை: அரசு திட்டப் பணிகள் தொடக்க விழாக்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் புகார் மனு அளித்தனர்.

கோவை வடக்கு தொகுதி எம்.எல்.வும், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான அம்மன் அர்ஜூனன் தலைமையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை ( செப்.2) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘கோவை மாவட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 10 பேர் உள்ளனர். அரசு திட்டங்களுக்கு பூஜை போடும் நிகழ்ச்சிகளுக்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. அதேபோல், அரசு மிதிவண்டி வழங்குதல் போன்ற நலத்திட்ட விழாவுக்கும் எங்களை அழைப்பது இல்லை. அப்படியே அழைத்தாலும், நாங்கள் வருவதற்கு முன்பு மிதிவண்டிகளை கொடுத்து விடுகின்றனர். மற்ற மாவட்டங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தான் அரசு திட்டங்களுக்கு பூஜைகள் போடுகின்றனர். ஆனால், கோவை மாவட்டத்தில் தலைகீழாக அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் திமுகவினரால் நடைபெறுகின்றன. மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு சாதகமாக உள்ளது.

பல பிரச்சினைகள் குறித்து தங்களிடம் கூறினேன். உதாரணத்துக்கு அவிநாசி சாலையில் உள்ள மேம்பாலத் தூண்களில் திமுக விளம்பரம் மட்டுமே உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதனைக் கண்டுகொள்ளவில்லை. அதேபோல், எனது தொகுதிக்கு உட்பட்ட மருதமலை முருகன் கோயிலில் மண்டபம் கட்ட பூஜை போடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினரான என்னை அழைக்கவில்லை. மாமன்ற உறுப்பினரை அழைக்காமல் திமுக பகுதி செயலாளரை வைத்து பூஜை போடுகிறார்கள். இப்படி இருந்தால் மக்கள் எங்களை எப்படி மதிப்பார்கள் என்பதை தங்கள் கவனத்துக்கே விட்டு விடுகிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

திமுகவினர் ஆதிக்கம்: தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மன் அர்ஜூனன் எம்.எல்.ஏ, “அரசு திட்டப்பணியை தொடங்கி வைப்பதில் எந்தவித உரிமையும் இல்லாத திமுகவினர் பூஜை போடுகின்றனர். எங்களை அழைப்பதில்லை. மிதிவண்டிகளையும் திமுகவினரை வைத்து அளித்து விடுகின்றனர். எங்களை அழைத்து அவமானப்படுத்துகின்றனர். இதுதான் திராவிட மாடலா? மக்கள் பிரதிநிதியை அழைக்காமல், கட்சியின் உறுப்பினரை வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கிவிடுகின்றனர். திட்டங்களை அவர்களே செயல்படுத்துகின்றனர். எம்.எல்.ஏக்களை புறக்கணிக்கின்றனர்.

எங்களது இடைக்கால பொதுச்செயலாளரிடம் இதுதொடர்பாக தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என முடிவு செய்துள்ளோம். நாங்கள் சுவரொட்டியை ஒட்ட தடை விதிக்கின்றனர். அனுமதி கேட்டும் பதில் தரவில்லை. திமுகவினரை மட்டும் ஒட்ட அனுமதிக்கின்றனர். இதுதான் திராவிட மாடலா? மக்கள் பிரதிநிதிகளை மதிப்பதே இல்லை. 10 கோரிக்கைகள் குறித்து தயார் செய்து நாங்கள் ஒன்றாக இணைந்து அளிக்க உள்ளோம்” என்றார்.Source link