நியூயார்க்: நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடந்த முக்கிய நிகழ்வுகள்

கைகுலுக்காத மார்டா கோஸ்ட்யுக்

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 26-ம் நிலை வீராங்கனையான பெல்லாரஸின் விக்டோரியா அசரன்கா 6-2, 6-3 என்ற நேர் செட்டில் உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கை தோற்கடித்தார். இந்த ஆட்டம் முடிவடைந்ததும் அசரன்காவுடன் கைகுலுக்காமல் நடுவருடன் மட்டும் கைகுலுக்கிவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார் மார்டா கோஸ்ட்யுக். பொதுவாக எந்த வகையிலான விளையாட்டு என்றாலும் ஆட்டம் முடிவடைந்ததும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். இது சிறந்த விளையாட்டு உணர்வாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மார்டாவின் செயல் விவாதப் பொருளாகி உள்ளது.

சகோதரிகள் தோல்வி

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் சகோதரிகளான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் ஜோடி 6-7 (5-7), 4-6 என்ற நேர் செட்டில் செக்குடியரசின் லூசி ஹ்ரடேக்கா, லிண்டா நோஸ்கோவா ஜோடியிடம் தோல்வியடைந்தது. வில்லியம்ஸ் சகோதரிகள் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டம், ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்றுள்ளனர். கடந்த 2018 முதல் இவர்கள் இரட்டையர் பிரிவில் இணைந்து விளையாடாத நிலையில் தற்போது மீண்டும் அவர்கள் ஜோடியாக களமிறங்கியிருந்தனர்.

கிர்கியோஸுக்கு அபராதம்…

ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ் 7-6(3), 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் பெஞ்சமின் போன்ஸியை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தின் போது கிர்கியோஸ் வீரர்கள் பயன்படுத்தும் பாக்ஸின் அருகே எச்சில் துப்பியுள்ளார். மேலும் கேலரியில் நின்ற ரசிகர் ஒருவரை பார்த்து தகாத வார்த்தைகளால் வசைபாடியுள்ளார். இதைத் தொடர்ந்து போட்டி அமைப்பாளர்கள் நிக் கிர்கியோஸுக்கு ரூ.5.96 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். இதுவரை வழங்கப்பட்ட அபராத தொகையில் இதுவே அதிகபட்சமாகும்.

நடால் காயம்

2-வது சுற்றின் 4-வது செட்டில் ரபேல் நடால் 3-0 என முன்னிலை வகித்த போது ஃபேபியோ ஃபோக்னிக்கு எதிராக ஆக்ரோஷமாக பந்தை திருப்பி அனுப்பினார். அப்போது அவரது டென்னிஸ் மட்டை தரையில் வேகமாக பட்டு மூக்கு பகுதியை தாக்கியது. இதனால் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. உடனடியாக காயத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு அதன் பின்னர் ஆட்டத்தை தொடர்ந்து நடால் வெற்றி கண்டார்.Source link