அம்பை: அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தி அம்பையில் மாஜி நகராட்சி துணை சேர்மன் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என வெளியான தீர்ப்பையடுத்து, மீண்டும் இணைந்து செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் கட்சி அலுவலகத்தை நொறுக்கி, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட முடியாது என்று கூறி அந்த அழைப்பை நிராகரித்ததோடு, சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நாளை மறுநாள் (திங்கள்) விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே சென்னை ஐகோர்ட் தீர்ப்பையடுத்து அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட ஓபிஎஸ் முயற்சித்து வருகிறார்.

மேலும் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்படவும் அவர் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அம்பையில் நகராட்சியின் 1வது வார்டு கவுன்சிலரும், மாஜி நகராட்சி துணை சேர்மனுமான கேஎஸ்ஆர் மாரிமுத்து, நகரில் ஓட்டியுள்ள போஸ்டரில், ‘‘அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்றிட, 100 ஆண்டு காலம் ஆட்சியில் அமர்ந்திட, கழகம் வலிமை பெற, தலைவர்கள் ஒன்று சேர்ந்திட, அனைத்து கழக தொண்டர்களும் குரல் கொடுப்போம்.’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ேபாஸ்டர் அம்பை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link