சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு இபிஎஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இதில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் உருவானது. எடப்பாடி தரப்பினர் கடந்த 11ம் தேதி கூட்டிய பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தான் வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் எழுதினார். மற்றொரு கடிதத்தில் தான் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எழுதினார்.

அதேபோன்று, ஓபிஎஸ்சும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தான் தொடர்ந்து நீடிப்பதாகவும், இதையே தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். ஆனால், இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது.

இந்நிலையில், பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அதிரடி தீர்ப்பு வழங்கியது. பொதுக்குழுவுக்கு பின்னர் அதிமுகவில் இருந்த நிலையை தொடரும் என்று கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் இணைந்து செயல்படலாம் என இபிஎஸ்க்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார்.

ஆனால், அதனை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். அதே நேரத்தில் பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையமும் அதிமுக சார்பில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் அனுப்பிய கடிதத்தை சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக எழுதிய கடிதத்தை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், ஓபிஎஸ் அணியினர் தற்போது அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளனர். அதாவது எடப்பாடி பழனிசாமி தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் வைத்திலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதனால் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தான் என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துவிட்டதாக எழுதிய கடிதம், தற்போது எடப்பாடிக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்க போகிறது என்ற பரபரப்பு தொண்டர்களிடையே தொற்றியுள்ளது.

Source link