‘வலிமை’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் ‘ஏகே61’ என அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 11 முதல் படப்பிடிப்பு தொடங்கி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பை குறுகிய காலத்திற்குள் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, படத்தில் அஜித் தவிர மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், பாலிவுட் நடிகை தபு அஜித்துக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று தகவல் வெளியானது. இப்போது தபுவுக்கு பதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகவில்லை என்றாலும், இப்போது அஜித்தின் பைக் ரேஸ் குழுவுடன் இணைந்து மஞ்சு வாரியர் இமயமலைக்கு பயணம் சென்றுள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அஜித் மற்றும் அவரது நண்பர்கள் குழுவுடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியரும் பயணம் செய்து வருகிறார்.

இதனை வலைதளங்களில் பகிர்ந்துள்ள மஞ்சு வாரியர், “எங்கள் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் குமார் சாருக்கு மனமார்ந்த நன்றிகள். எனது முதல் இரு சக்கர வாகனப் பயணத்திற்காக அட்வென்ச்சர் ரைடர்ஸ் இந்தியா குழுவில் இணைவதில் பெருமை அடைகிறேன்” என்று பதிவிட்டு பயணத்தின்போது அஜித் உடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.Source link