மும்பை: புரோ கபடி போட்டியின் 9வது தொடர் அக்.7ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. கடந்த 2014ல் தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வந்த புரோ கபடி போட்டி, 2020ல் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த 8வது தொடரின்போதும், தொற்று பரவல் குறையாததால் அனைத்து போட்டிகளும் பெங்களூருவில் மட்டும் நடத்தப்பட்டன. ரசிகர்களும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 9வது தொடர் அக்.7ம் தேதி தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெங்களூரு, புனே, ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. ரசிகர்களை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று புரோ கபடி நிர்வாகம் அறிவித்துள்ளது.